பதிவு செய்த நாள்
29
செப்
2022
10:09
திருவொற்றியூர் : நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உற்வசர் பராசக்தி அலங்காரத்திலும், மணலி, திருவுடைநாயகி கோவிலில் மூலவர், மதுரை மீனாட்சி ராஜ அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், கடந்த 26 ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன் நவராத்திரி திருவிழா துவங்கியது.
நேற்று முன் தினம் இரவு, இரண்டாம் நாளில் வடிவுடையம்மன் உற்சவ தாயார், சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் பராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், பழமையான திருவுடைநாதர் உடனுறை திருவுடைநாயகி கோவில், 26 ம் தேதி துவங்கிய நவராத்திரி விழாவில், முதல் நாளில் மூலவர் அம்மனுக்கு, சந்தன காப்பு காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, மதுரை மீனாட்சி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய திருவுடைநாயகி கண்டு பக்தர்கள் லயித்து போயினர். விழா நடைபெறும் பத்து நாட்களுக்கு, மூலவர் அம்மனுக்கு வெவ்வெறு அலங்காரங்கள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.