பதிவு செய்த நாள்
02
அக்
2022
07:10
பாடல்
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!
மூல மந்திரம்: ஓம்- லம்- லக்ஷ்மியை -நம
காயத்ரி: ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்யைச தீமஹி
தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்
லட்சுமியை ஏழாம் நாளன்று மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது ஆவாஹனம் செய்வது முறையாகும்; இது தேவியின் அவதார நாள். பூஜையின் போது “ரக்த சந்தனம்” என்றழைக்கப்படும் செந்நிற சந்தனத்தை வில்வத்தில் தோய்த்து தேவிக்கு அர்ச்சனை செய்பவர் அரச வாழ்வைப் பெறுவர்.
வெற்றித் திருமகள் எப்போதும் உன் தோள் பற்றித்திரிவாள்…உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு!!!துன்பங்களைக் கண்டு நீ ஓடிய காலம் போய், துன்பங்கள் உன்னைக் கண்டு ஓடும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், நவராத்திரி விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும்.முறையான விரத வழிகளை கண்டு, அதன்படி விரதத்தை மேற்கொண்டால் சகல சவுகரியங்களும் கிடைக்கும். அனைத்தும் தெளிவாகும்
ஆனந்தம் தாண்டவமாடும்
இறையருள் கூடும்
ஈரேழு உலகமும் துணை நிற்கும்
உண்மை விளங்கும்
ஊரே உன்னை கொண்டாடும்
எப்போதும் வெற்றியே
ஏகாந்தமாய் மலர்ந்திருப்பாய்
ஐக்கியமாய் உணர்வாய்
ஒருவனே தேவன் என தெளிவாய்
ஓங்கும் உன் புகழ்
ஒளதடமாய் பிறவிநோய் தீரும்
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி விடுகிறான். அதற்கான வழிபாடே நவராத்திரி கொண்டாட்டங்கள். நவராத்திரி என்பது அம்பிகைக்கு உரிய பூஜை. அந்த வழிபாட்டில் கொலுவில் அம்பிகையின் உருவ பொம்மைகளோடு, பிற தெய்வங்களின் உருவங்களையும் வைத்து பூஜை செய்வதற்கு காரணம் உண்டு. ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி ஆகிய நாட்களில், அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை மட்டும் வழிபடுகிறோம். ஆனால், நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுள்களையும் வைத்து பூஜை செய்கிறோம். மஹிஷாசுரனை அழிக்க அனைத்து ஜீவராசிகளின் அம்சங்களிலிருந்து அம்பிகை உருவானாள் என்பதை வெளிபடுத்தும் விதமாக புல், பூண்டு, தாவரங்கள் ஊர்வன, பறப்பன, மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என, வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து, மத்தியில் நடுநாயகமாக அம்பிகையின் உருவத்தை வைத்து வழிபடுகிறோம். அதனால் தான் பிற விஷேச நாட்களில் பூஜிக்க இயலாதவர்கள் கூட, நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம், எல்லா கடவுள்களையும் வழிபட்ட பலனை அடைய முடியும் என்கின்றனர்.
புத்தி தெளிவுக்கு காளராத்ரி வழிபாடு: கையில் ஜெபமாலை, கோடாரி, கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள். சண்ட முண்டர்களை வதைத்த பின் பொன் பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணை வாசிக்கும் கோலம். இந்நன்னாளில் தையல் நாயகியான அம்பாளை வணங்குவது புத்தி தெளிவையும், சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும்.
பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து, சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்; மலர்கொண்டு திட்டாணி வகை கோலம் அன்னையாகும். காளராத்ரியாக பாவித்து வழிபட வேண்டியவள். காளராத்ரி என்றால் அடர்ந்த இருட்டு என, அர்த்தமாகும். இந்த நாளன்று தன் பக்தர்களுக்கு இவர் தைரியத்தை அளிப்பார். காளராத்ரி சிலைக்கு, நான்கு கைகள் உண்டு. இவளை, சாம்பவி என்றும் அழைப்பர். இத்தனை ஆயுதங்களை ஏந்தி வீராவேஷமாய் காட்சியளிக்கும் அம்பிகையை காணும்போது, நம் மனதில் தைரியமும், நம் வாழ்க்கை நம் கையில் அதை ரசித்து வாழ வேண்டும்; பிறரின் வளமான வாழ்வைக் கண்டு ஏங்க கூடாது. அப்படி ஓர் எண்ணம் இருப்பின், நானே அக்னிபிழம்பாய் மாறி அழித்துவிடுவேன் என, பயமுறுத்துவதாய் அம்பிகையின் தோற்றம் இருக்கும். பூக்களால் அலங்கார கோலமிட வேண்டும். 8 வயது பெண் குழந்தையை அழைத்து, அலங்கரித்து உபசாரம் செய்து துதிக்க வேண்டும். அக்குழந்தைக்கு உடை கொடுத்து, திராட்சை பழ ரசமும், விரளி மஞ்சளும் தானம் கொடுக்க வேண்டும். விளையாட கூழாங்கற்களை கொடுக்கலாம்.
நிவேதனம்: பயறு சுண்டல்,தேங்காய் சாதம், எலுமிச்சை பழ சாதத்தை நிவேதனமாக படைக்க வேண்டும். பிலஹரி ராகத்தில் கீர்த்தனையில் பாட வேண்டும். ஒன்பது நாட்களும் பூஜை செய்ய முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் சப்தமி அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்தால், ஒன்பது நாட்களும் பூஜை செய்த பலனை அடைவர்.
கலச வழிபாடு: ஒரு சொம்பில் சுண்ணாம்பு தடவி, சுற்றிலும் குங்கும பொட்டு வைத்து, செம்பினுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். பின் மாவிலையையும், மஞ்சள் பூசிய தேங்காயையும், செம்பின் மீது கும்பலாக வைக்க வேண்டும். மலர் கோலம் போட வேண்டும்.
நைவேத்தியம் : காலையில் வெண் பொங்கல், பால் பாயசம்
: மாலையில் கடலைப்பருப்பு, புதினா சுண்டல்
அம்பாள்: ஸ்ரீமகாலக்ஷ்மி
குணம்: சவும்யம்
சிறப்பு : ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி
பூஜை நேரம்: மாலை 6:00 - -7:30 மணி
மலர்கள்: முல்லை, வெண்மை நிறமுடைய மலர்கள்
தாம்பூலங்கள் : 11 வகையான மங்கல பொருட்களை, தாம்பூலமாக பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுக்க வேண்டும்
ராகம்: கல்யாணி
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள்: பரணி, பூரம், பூராடம்
திசை புத்தி நடப்பவர்கள்: சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்.