பதிவு செய்த நாள்
04
அக்
2022
07:10
வடபழநி :வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் எட்டாம் நாளான நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார்.வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு, தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.சக்தி கொலு எட்டாம் நாள் விழாவை, வடபழநி கோவில் கும்பாபிஷேகத்தின் போது திருப்பணி உபயதாரர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.நேற்று இரவு, ஜானகி அய்யர் மற்றும் குழுவினரின் பக்திப் பாடல்கள் கச்சேரி நடந்தது. மேலும், குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு, 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.