பதிவு செய்த நாள்
04
அக்
2022
07:10
திருமலையில் புரட்டாசி மாதத்தை ஒட்டி, ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த வாரம் செவ்வாய் கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் ஏழாம் நாளான நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில், ஸ்ரீமத்ய நாராயண சுவாமி அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
சூரிய பிரபைசூரியக் கடவுள் சூழலியல் சமநிலைக்கு திறவுகோலாக இருப்பதால், அவர் கண்கூடாக தெரியும் தெய்வமாக கருதப்படுகிறார். முழு வாழ்க்கை சுழற்சிக்கான ஆற்றலின் முக்கிய ஆதாரம். அவர் உயிர்களின் உலகளாவிய ஆதாரம் என்பதை வெளிப்படுத்த, இறைவன் மத்ஸ்ய சூரியனாராக செந்நிற மாலைகளை அணிந்து, தன் பக்தர்களை ஆசீர்வதித்தார். சந்திர பிரபைவருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவு, குளிர்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வெண்ணிற மாலையை அணிந்து மாடவீதியில் வலம் வந்தார். சூரிய, சந்திரர்கள் இருவரும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். வாகன சேவைகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையை வணங்கினர். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோலாட்டங்களும், பஜனைகளும், மேள தாளங்களும் நாட்டிய நிகழ்ச்சிகளும் பக்தர்களை கவர்ந்தன. இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.