பதிவு செய்த நாள்
04
அக்
2022
09:10
வடவள்ளி: சுண்டப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி பிரம்மோற்சவத்தையொட்டி, தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
சுண்டபாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு புரட்டாசி பிரம்மோற்சவம், கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள் திருவீதி விழா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று, காலை, 5:45 மணிக்கு, ரதாரோஹணம் உற்சவம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து, காலை 10:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, பெருமாள் தேவியாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசித்து சென்றனர். திருத்தேர் நான்கு ரத வீதிகளின் வழியாகவும் வீதி உலா வந்து, நேற்று மாலை தேர்நிலையில் நிறுத்தப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.