திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் நனையும் பழமை வாய்ந்த ஆதி சிவலிங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2022 07:10
சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுச்சந்தை ஊராட்சியில் உள்ள கடுகுசந்தை சத்திரம் என்னும் கிராமத்தில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற ஆதி சிவன் கோயில் உள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் மகா மண்டபம், கருவறை உள்ளிட்டவைகள் முற்றிலும் இடிந்து திறந்தவெளியில் சிவலிங்கம் வெயிலிலும் மழையிலும் நனைந்து வரும் நிகழ்வு பக்தர்களுக்கு வேதனை அளித்து வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சத்திரம் என்னும் இடத்தின் அருகே அமைந்துள்ள ஆதி சிவன் கோயில் திறந்தவெளியில் உள்ளது.
இதன் அருகே சுற்றிலும் 30 அடி இடைவெளியில் பழமை வாய்ந்த சுண்ணாம்பு, செங்கல் கட்டுமானம் இடிபாடுகளுடன் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே 6 ஏக்கர் பரப்பளவில் ராஜா தெப்பக்குளம் அமைந்துள்ளது. கடுகுச்சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து கூறியதாவது; சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பிறகு இக்கோயிலின் கட்டுமானம் முழுமையாக சிதிலமடைந்து இருந்ததால் அகற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு மூலவர் ஆதி சிவலிங்கத்திற்கு கட்டுமானம் எதுவும் நடக்காமல் திறந்த வெளியிலேயே தற்போது வரை இருந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய யாத்திரிகர்கள் பஸ் வசதி இல்லாத காலங்களில் இங்குள்ள சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து வழங்கப்படும் அன்னதானத்தை உண்டு விட்டு செல்வது வழக்கமாகும். இங்கிருந்து 110 கி.மீ., ராமேஸ்வரம், 110 கி.மீ., திருச்செந்தூர் சம அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டிய மன்னர் காலத்து பழமையை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் ஏதுமின்றி திறந்த வெளியில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் சிதிலமடைந்த கோயில்களுக்கு புதியதாக திருப்பணி செய்வதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இதன் மூலம் சிவன் கோயில் திருப்பணி நடைபெற்றால் பழமை வாய்ந்த புராதான சிவன் கோயிலை மீட்டெடுக்க இயலும். ஆதிசிவன் கோயில் மீட்டெடுப்பு விஷயத்தில் கடுகு சந்தை ஊராட்சி மக்கள், சிவனடியார்கள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். எனவே ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து இக்கோயிலை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சாயல்குடி அருகே 7 கி.மீ., தொலைவில் கடுகு சந்தை சத்திரம் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.