சதுரகிரியில் அணைக்கப்பட்டது காட்டுத்தீ; பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2022 07:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையினரின் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுத்தீ அணைக்கப்பட்டதால், புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று (அக்.8) முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் வத்திராயிருப்பு வனச்சரகம் நான்காவது பீட்டு பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட வத்திராயிருப்பு வனத்துறை ஊழியர்கள் பல மணி நேரம் போராடி நேற்று காலையில் காட்டுத்தீயை அணைத்தனர். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்திற்கு வந்திருந்தனர். ஆனால், மலையேற அனுமதிக்காததால், வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி, கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று அக்டோபர் 8 முதல் 10 ஆம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.