பதிவு செய்த நாள்
08
அக்
2022
03:10
தஞ்சாவூர், மருத்துவக்குடியில் 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் பழமையான முறையில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடியில் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கடந்த 1938ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் விஸ்வநாதருக்கு அமாவாசை தினத்தில் தயிர் அபிஷேகம் செய்தால் நல்ல சப்புத்திரப்பேறு, பதவி உயர்வு ,காரிய வெற்றி கிடைக்கும் பெருமைைை உடைய தலமாகும். மருத்துவக் குடி பஞ்சாங்கம் உலக பிரசித்திப் பெற்றது. இவ் ஊரில் வேத வித்வான்கள் பலர் வாழ்ந்த மகத்துவம் வாய்ந்த மருத்துவக்குடி என்ற பெருமையுடையது.
நாளடைவில் சிதலமடைந்து காணப்பட்ட இக்கோயிலில் மீண்டும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி 26ம் தேதி பாலாலயம் நடந்தது. கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், ஆறுமுகர், முன் மண்டபம், மடப்பள்ளி மற்றும் காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட அனைத்தையும் பழமை மாறாமல் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. உறுதித்தன்மையுடன் பல ஆண்டுகள் கட்டுமானம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பாரம்பரிய முறையான சுண்ணாம்பு, மணல், கடுக்காய், கற்றாழை, வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி கோயிலில் கட்டுமானம் மற்றும் பூச்சு வேலைகள் நடக்கிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. கும்பேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோயில் சிவாச்சாரியார் சிவஞானசம்பந்தமூர்த்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்து சமய அறநிலை துறையின் வழிகாட்டலுடன் கோயிலில் சிமெண்ட் பயன்படுத்தப்படாமல் உறுதித் தன்மை உள்ள வகையில் பழமையான பாரம்பரிய முறைப்படி திருப்பணி நடக்கிறது. மருத்துவக்குடி ஸ்தபதி கணேசன் தலைமையிலான குழுவினர் கடுக்காய், கற்றாழை, நாட்டு வெல்லம் ஆகியவற்றை முறையாக சேர்த்து ஊற வைத்து பின்னர் ஒரு பங்கு சுண்ணாம்பு இரண்டு பங்கு மணல் கலவையை நன்கு கிரைண்டரில் அரைத்து அதில் முட்டை சேர்த்து பின்னர் ஊற வைத்த கலவையும் கலந்து பதமான முறையில் எடுத்து பூச்சு வேலை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இதுவரை 27 டன் சுண்ணாம்பு, 20 ஆயிரம் முட்டைகள் மற்றும் கடுக்காய், கற்றாழை உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் சுவாமி, அம்பாள், விநாயகர், ஆறுமுகர் ஆகிய நான்கு விமானங்கள் முன் மண்டபம், மடப்பள்ளி ஆகியவை உபயதாரர்கள் கொண்டு திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. கோயிலின் காம்பவுண்ட் சுவர் ரூ. 17. 5 லட்சம் மதிப்பில் அறநிலையத்துறை சார்பில் திருப்பணி செய்யப்படுகிறது. இக்கோயிலில் வரும் நவம்பர் 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 112 அடி நீளம் 16 அடி அகலத்தில் யாகசாலை மண்டபம் அமைத்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணி மற்றும் யாகசாலை பூஜைகள் சுமார் ரூ 75 லட்சம் மதிப்பில் நடைபெறுவதால் பக்தர்களும் இதில் பங்கேற்க முன் வருமாறு திருப்பணி கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுவரில் வெடிப்பு ஏற்படாது: மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயில் பழமையான முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை கொண்டு திருப்பணி செய்யப்படுவதால் வெயில் தாக்கத்தால் சுவரில் வெடிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் ஈரப்பதத்தை உள்வாங்கி கொண்டு கோடை காலத்திலும் கருவறை உள்ளிட்ட கோயில் உட்பகுதி முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய கட்டுமானங்கள் நடந்துள்ளது. தற்பொழுது அத்தகைய உறுதித்தன்மையுடன் கூடிய பழமையான கட்டுமானத்துடன் இக்கோயில் திருப்பணி நடைபெறுவது பலரும் நேரில் வந்து வியந்து பார்த்து வருகின்றனர். அறநிலையத்துறையினர். தமிழக அரசும், அறநிலைத்துறையும் பழமையான கோயில்களை இத்தகைய முறையில் திருப்பணி செய்ய வலியுறுத்தி வருவது குறிப்பிடதக்கது.