பதிவு செய்த நாள்
13
அக்
2022
01:10
திருமங்கலம்: திருமங்கலம் அருகேயுள்ள வாகைகுளத்தில் அய்யனார், கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் தங்கள் தேவைகள் நிறைவேறினால் சிலை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். நேர்த்திகடனாக சிலை செய்வதாக வேண்டி கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அரசு பணி வேண்டும். என்றால் அரசு ஊழியர், காவல்துறை ஊழியர், ராணுவவீரர் போன்ற சிலைகளும், விவசாயம் செழிக்கவேண்டினால் டிராக்டர், காளைமாடு சிலைகளும், விஷபூச்சிகள் தீண்டாமல் இருக்க நாகர்சிலை உள்ளிட்ட சிலைகளும் நேர்த்திகடனாக செய்வதாக வேண்டி கொள்வர். சிலைகள் வாகைகுளம் கிராமத்திலுள்ள கண்மாய் மண்ணில் மட்டுமே செய்யப்படும். இதனால் கடந்த இரண்டு. மாதங்களாகவே நேர்த்திகடன் வேண்டி கொண்ட பக்தர்கள் சிலை செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3 மணியளவில் சிலை செய்யும் வீடுகளிலிருந்து பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட சிலைகளான ஆசிரியர், ராணுவவீரர், அரசியல் தலைவர், டிராக்டர், ஆடு, மாடு சிலைகள், கருப்பணசாமி, அய்யனார் சாமி சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள கோயிலில் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றினர். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல். நெல்லை, கம்பம், திருச்சி. உசிலம்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.