பதிவு செய்த நாள்
23
அக்
2022
07:10
தீபாவளி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை; அடித்தட்டு மக்கள் முதல் பெரிய கோடீஸ்வரர்கள் வரை பண்டிகை கொண்டாட்டத்தை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவரவர் நிலைக்கேற்ப புத்தாடை, பட்டாசு, பட்சணம் போன்றவை மூலம் பண்டிகையை வரவேற்கின்றனர். தமிழகத்தில் கார்த்திகை மாதம் தீபத் திருநாளாக கொண்டாடப்படுவது போல், வேறு சில மாநிலங்களில் தீபாவளியை தீபத் திருநாளாக கொண்டாடுகின்றனர். தீபாவளி குறித்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை உணர்த்துவது, தீமைகள் அழிந்து மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்து என்பதாகவே உள்ளது.
நரகாசுரன் வதம்: மக்களை துன்புறுத்திய நரகாசுரனை, கிருஷ்ணர் வதம் செய்து அழித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். கங்கா ஸ்நானம் என்ற பெயரில் எண்ணெய் குளியல் எடுத்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ந்தும், பட்சணம் தயாரித்து உண்டும், உறவினர் நண்பர்களுக்கு வழங்கியும் கொண்டாடுகிறோம்.
ராமர் அயோத்தி திரும்பிய நாள்: வட மாநிலங்களில் ராமபிரான் தனது வனவாசம் முடிந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் அயோத்திக்கு திரும்பி வந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ராமர் தன் தாயின் வேண்டுகோளை ஏற்று வனவாசம் சென்ற நிலையில் அயோத்தி நகரம், ஒளியிழந்து களையிழந்து பெரும் சோகம் நிலவியது. அவர் திரும்பி வந்த போது, ஒளி திரும்பியது. மகிழ்ச்சியில் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், பட்சணங்களை பகிர்ந்தும் கொண்டாடினர். இந்த கொண்டாட்டம் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், பீகார், ஹரியானா மாநிலங்களில் இந்த வகையில், வீடுகளில் ஒளி விளக்கு ஏற்றி கொண்டாடப்படுகிறது.
லட்சுமி பூஜை: சில பகுதிகளில் தீபாவளியன்று இரவில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் வெள்ளி மற்றும் தங்க நாணயம் வைத்து வழிபாடு செய்கின்றனர். இதை குபேர லட்சுமி பூஜை என்றும், இதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதும் அவர்கள் நம்பிக்கையாக உள்ளது.
தீபம் ஏற்றும் சீக்கியர்கள்: பஞ்சாபில், சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் கட்டுமானப் பணி துவங்கிய நாளை, தீபாவளியாக கொண்டாடுகின்றனர். வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வழிபாடு நடத்தும் குருத்வாராக்களில் தீபம் ஏற்றுகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடும் குஜராத்: குஜராத்தில், தீபாவளி புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவது, தொழில்கள் தொடங்குவது, அலுவலகம், கடைகள், தொழிற்சாைல துவக்குவது; திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களையும் இந்த நாளில் அவர்கள் செய்கின்றனர்.தீபாவளியன்று இரவில் தியா என்ற பெயரில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் மழை வளமும், செல்வச் செழிப்பும் நீடிக்கும் என்பது ஐதீகம்.
மகாராஷ்டிராவில்நான்கு நாள் விழா: மகாராஷ்டிராவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பசு வழிபாடு நடத்தப்படும். இரண்டாவது நாள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மூன்றாவது நாள் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துவர். நான்காவது நாள் லட்சுமி பூஜை நடத்துகின்றனர். இதில் தங்கம், பணம் வைத்து பூஜை நடத்துவர். செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேற்கு வங்கத்தில் காளி பூஜை: மேற்கு வங்கத்தில் தீபாவளி, துர்கா தேவியை வணங்கும் காளி பூஜையாக கொண்டாடுகின்றனர். அனைத்து இடங்களில் காளி தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்துகின்றனர். மேலும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஒரு சில கிராமங்களில் ஒரு தரப்பினர் தீபாவளியை தங்கள் முன்னோர்கள் ஆன்மா சொர்க்கத்துக்குச் செல்லும் நாளாக பின்பற்றுகின்றனர்.
கர்நாடகாவில் நரக சதுர்த்தசி: கர்நாடகாவில், தீபாவளி மூன்று நாள் பண்டிகையாக உள்ளது. முதல் நாள் அஸ்விஜா கிருஷ்ண சதுர்த்தசி. அன்று கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பட்டாசு வெடிப்பர். இரண்டாவது நாள் பாலிபத்யாமி என்றும் மூன்றாவது நாள் நரக சதுர்த்தசியும் கொண்டாடப்படுகிறது.
ஆந்திராவில் சத்யபாமாவுக்கு சிறப்பு: ஆந்திராவில், பகவான் கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை வதம் செய்து அழித்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. களி மண்ணால் செய்த சத்யபாமாவின் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்.
அசோக விஜயதசமி : சமண மதத்தில், மகாவீரர் நிர்வாண் நிலை பெற்று முக்தி பெற்ற நாள் புனித நாளாக கருதப்படுகிறது. இதை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர், மாமன்னர் அசோகர் தன் ராஜ பதவியை துறந்து புத்த மதம் தழுவிய நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இதை அசோக விஜயதசமி என்கின்றனர். அசோகர் தன் திக் விஜய யாத்திரை முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அனைத்து மதங்களும், வழிபாடு முறைகளும், அனைத்து தரப்பு சான்றோர்களும் வலியுறுத்துவதும், போதிப்பதும் அன்பு, நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சொல் உள்ளிட்ட நல்ல பண்புகளைத் தான். இதைத் தான் பண்டிகைகளும், வழிபாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன. தீபாவளி திருநாளன்று இயலாதவர்களுக்கு நம்மால் இயன்றதைக் கொடுத்து உதவுவோம்; அதுதான் நிஜ தீபாவளி கொண்டாட்டமாகவும் இருக்கும்!