திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை காலை 2 சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 07:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை அக். 25 கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று சூரிய கிரகணம் இருப்பதால் காலையில் இரண்டு சண்முக அர்ச்சனை நடக்கிறது.
சஷ்டி திருவிழாவில் தினம் காலை 11:00 மணிக்கும் மாலை 6:30 மணிக்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு சண்முகார்ச்சனை நடைபெறும். நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாளை காலை 11:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 7:30 மணிக்கு கிரகண பூஜைகள் முடிந்து கோயில் நடை திறக்கப்படும். இதனால் அன்று மாலை நடக்க வேண்டிய சண்முகா அர்ச்சனையும் காலையில் நடக்கிறது. சஷ்டி திருவிழா நடைபெறும் ஆறு நாட்களும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அவர்களுக்கு மதியம் தேன், சர்க்கரை கலந்த தினை மாவு பிரசாதம் வழங்கப்படும். மாலையில் சர்க்கரை கலந்த எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படும். கோயில் நடை சாத்தப்பட்டாலும் மண்டபங்களில் பக்தர்கள் தங்கலாம். அவர்களுக்கு தினை மாவு, எலுமிச்சம் பழச்சாறு பிரசாதம் காலை 11:00 மணிக்குள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.