பதிவு செய்த நாள்
29
அக்
2022
09:10
பழநி: பழநி கந்த சஷ்டி விழாவில் சூரசம்காரத்திற்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் சூரன்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது .
பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்., 25 முதல் அக்.,31 வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.,30) நடைபெற உள்ளது. நான்கு சூரன்கள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, கிரி வீதியில் சின்ன குமார சுவாமி, பராசக்தி வேல் கொண்டு சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் பங்கு பெறும் சூரன் பொம்மைகள் மிகசிரத்தையாக பெரிய நாயகி அம்மன் கோயிலில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆறு ஐடி உயரமும், நான்கு அடி அகலத்திலும் தனிதனியே வண்ண காயிதங்களால் அலங்கரிக்கப்பட்ட சூரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின் ஒவ்வொரு சூரனுக்கும் தகுந்த வடிவமைப்பில் தலை உருவாக்கப்பட்டு அதை முறைப்படி பூஜைகள் செய்து சூரன் பொம்மைகளில் பொருத்தி, சூரன் ரதங்களை உருவாக்கி அதன் மூலம் கிரி வீதிகளுக்கு கொண்டு செல்வர்.
மலைக்கோயில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என நான்கு சூரங்கள் நான்கு இடங்களில் வதம் செய்யும் நிகழ்ச்சி பழநியில் நடைபெறுவது தனிசிறப்பு. ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் சூரசம்கார தினத்தன்று வாழைதண்டு பல வகைகளுடன் விரதம் முடித்து சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்வர். மாலை 6:00 மணிக்கு துவங்கும் சூரசம்ஹார இரவு 9:00 மணி வரை நடைபெறும். மலைக்கோயிலில் இருந்து உற்சவர் சின்னகுமாரசுவாமி, இந்த ஆண்டில் இந்த நாளில் மட்டும் கிரிவலப் பாதைக்கு இறங்கி வருவார். கிரிவலப் பாதையில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சின்னகுமாரசுவாமியின் படைகளாக இருந்து நான்கு சூரன்களையும் வதத்தில் கலந்து கொள்வர். இதில் கந்த புராணம் பாடப்பட்டு, பராசக்தி வேல் கொண்டு சூரசம்ஹாரம் நடைபெறும். இதனை அடுத்து 9:00 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வள்ளி, தெய்சேனா சமேத முத்துக்குமாரசாமியும் சின்ன குமாரசாமியும் எதிரெதிரே ஒரே சமயத்தில் தீபாதாரனை நடைபெற்று வெற்றி விழா கொண்டாடப்படும். இதனை அடுத்து சின்னகுமாரசுவாமி மலைக்கோயில் சென்றபின் சாயரட்சை பூஜை நடைபெறும்.