திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: கடற்கரையில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2022 08:10
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்பாக கடற்கரையில் இன்று மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடக்கிறது. கடந்த 25ம் தேதி விழா யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. 5ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. 12:00 மணியளவில் தீபாராதனையும்,12:45 மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்யங்கள் முழங்க சண்முக விலாசம் வந்து சேர்ந்தார். மாலையில் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு அபிஷேக அலங்காரமாகி கிரி வீதி உலா நடந்தது. 6ம் திருநாளான இன்று 30ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வுக்குப் பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. நாளை அக்.31ல் 7ம் திருநாளன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து நவ.5ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் விழாக்கோலம் காண்கிறது. திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி, மதுரை, நெல்லை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போலீசார், ஊர்க்காவல் படையினர் என 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.