மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2022 11:10
மயிலாடுதுறை: துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் புனித நீராடி, வழிபாடு நடத்தினார்.
பார்வதி தேவி மயில் உரு கொண்டு சிவபெருமானை பூஜித்து சாபம் நீங்கிய தலமான மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளும், பக்தர்களும் காவிரியில் நீராடி தங்களது பாவங்களை போக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு கடந்த ஐப்பசி ஒன்றாம் தேதி தொடங்கி துலா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடனேஸ்வர சுவாமிகள் ஆகியோர் துலாஸ்தானம் செய்ய காவிரி துலா கட்டத்தின் வடக்கு கரைக்கு வந்தனர். அவர்களுக்கு, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை வதான்யேஸ்வர சுவாமி திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சங்கல்ப ஸ்நானம் செய்துவைக்கப் பெற்றது. தொடர்ந்து அவர்கள் காவிரியில் புனித நீராடி காவிரி கரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.