பதிவு செய்த நாள்
08
மே
2025
11:05
திருப்பூர்; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என பெருமை பெற்றதுமான பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் நடப்பாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்து வந்தார். விழாவில் நேற்று 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று 8ம் தேதி காலை தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை 9ம் தேதி பெரிய தேர், 10ம் தேதி காலை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம், 13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகன காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.