பதிவு செய்த நாள்
08
மே
2025
11:05
பெங்களூரு; ‘ஆப்பரேஷன் சிந்துார்’ வெற்றியை கொண்டாடும் வகையில், கர்நாடக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில், இந்திய ராணுவத்தின் பெயரில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் 26 அப்பாவி மக்களை கொன்ற, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஹல்காமில் அப்பாவிகளை கொன்றதற்கு, பிரதமர் மோடி அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது என்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய ராணுவத்திற்கு மேலும் பலம் கிடைக்க, கர்நாடக அரசின் அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய, அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று காலை உத்தரவிட்டார். அதன்படி இந்திய ராணுவம் பெயரில், அரசு சார்பில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு, கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.