திருப்பதி: இயற்கை பேரிடர்களிடம் இருந்தும் நோய் தொற்றுகளிடம் இருந்தும் மக்களை காப்பாற்ற வேண்டி திருப்பதி திருமலையில் பிரம்மாண்ட புஷ்ப யாகம் நேற்று (1ம்தேதி) நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை பிரம்மோற்சவம் முடிந்த பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பிறந்த நட்சத்திரமான ஸ்ராவண நட்சத்திரத்தன்று நடைபெறும் இந்த புஷ்பயாகத்திற்காக கோவிலுக்கு சொந்தமான மலர்த் தோட்டத்தில் இருந்தும், நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்ட வண்ண மயமான மலர்கள் கூடை கூடையாக ‛டன்’ கணக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சுவாமி முன் சமர்ப்பிக்கப்பட்டது. சாமந்தி, மொகலி, கனகாம்பரம் ரோஜா, தாமரை, அல்லி, மனுசம்பங்கி, மனோரஞ்சிதம், மருவம், பச்சக்கு, பன்னீர், பில்வம் உள்ளிட்ட ஒன்பது டன் மலர்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டன.