பதிவு செய்த நாள்
14
நவ
2022
07:11
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் நேற்று, 40 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 31 காத்திருப்பு அறைகளை கடந்து சிலா தோரணம் அருகில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தர்ம தரிசனத்திற்கு 40 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 5 - 6 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள், 5 - 6 மணிநேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முழுதும், 73 ஆயிரத்து 323 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை; தரிசன தினத்தன்று மட்டுமே வழங்கப்படுகின்றன.