பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் செயற்கைகோள் மூலம் அளவீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2022 07:11
புவனகிரி: பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம் 25 ஏக்கர் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், புவனகிரி பகுதியில் செயற்கைகோள் உதவியுடன் நேற்று அளவீடு செய்தனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம் 24 ஏக்கர் 96 சென்ட் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் உளுத்துார் சாலையில் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் தொடர் குத்தைகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு முறையான குத்தகை தராமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக குத்தகை பாக்கி கிடப்பில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் செயற்கை கோள் உதவியுடன் இடத்தை அளவீடு செய்ய கடந்த வாரம் மருதுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். அதன் படி நேற்று செயல் அலுவலர் மஞ்சு தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன், இந்து சமய அறநிலைத்துறை நில அளவையர்கள் முத்துராஜ், வினோத்குமார் உள்ளிட்டவர்கள் செயற்கை கோள் உதவியுடன் இடத்தை அளந்து கல் பதித்தனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், தனிப்பிரிவு ஏட்டு நிர்மல்குமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் முத்துக்குமரசாமி, லட்சுமணன் ,பரம்பரை அறங்காவலர் வரதராஜ பட்டாச்சாரியர் உள்ளிட்டவர்கள் இடத்திற்கான எல்லை வடிவத்தை காண்பித்தனர். தற்போதுள்ள நிலத்தை குத்தகை பாக்கி வைத்துள்ள தனியாரிடம் இருந்து மீட்டு பொது குத்தகைக்கு ஏலம் விடுவதற்குஆயத்தமாகியுள்ளனர்.