பதிவு செய்த நாள்
16
நவ
2022
05:11
திருவண்ணாமலை: “வரும் டிச., 6ல், பாபர் மசூதி இடிபபு தின நாளில், மஹா தீபம் திருவிழா வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும், 21 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் மற்றும் மாடவீதி முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்,” என, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, வேலு ஆகியோர் தலைமையில் நடந்த தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், அவர் பேசியதாவது: தீப திருவிழா பாதுகாப்பு பணியில், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 32 எஸ்.பி.,க்கள், 43 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 101 டி.எஸ்.பி., மற்றும் ஏ.எஸ்.பி.,க்கள், உள்ளிட்ட, 12 ஆயிரத்து, 97 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன், 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறை வீரர்களும் ஈடுபடுவர். கோவில் வளாகத்திற்குள், 169, கிரிவலப்பாதையில் ஒன்பது கண்காணிப்பு கேமராக்கள் என, விழாவில், 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளன. கிரிவலப்பாதை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், 57 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும், 35 ஹெல்ப் பூத் அமைக்கப்பட உள்ளது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், என நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது. தன்னார்வலர்களாக கல்லுாரி மாணவர்கள், 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவில், மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போனால், எளிதில் கண்டறிய, பஸ் ஸ்டாண்டில் பெற்றோர்களுடன், குழந்தைகள் வந்திறங்கியவுடன், அவர்களது கையில் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அடையாள அட்டை கையில் கட்டப்படும். டிச., 6 பாபர் மசூதி தின இடிப்பு நாளில், மஹா தீப விழா வருவதால், வரும், 21 முதல், மாடவீதி மற்றும் கோவில் வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, அனைத்து கடைகள், லாட்ஜ்கள், மக்கள் கூடும் இடங்கள், கோவில் வளாகம் என, அனைத்து இடங்களும் ஆய்வு செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.