கடை முக தீர்த்தவாரி- காவிரியில் பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2022 05:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு சுவாமியை பூஜித்த இடம் மயிலாடுதுறை. அதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி 1ம் தேதி தொடங்கி 30 நாட்கள் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. 30ம் நாளான நேற்று கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை முன்னிட்டு அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குளம் காசி விஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி, படைவெட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து கங்கை அம்மன் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அங்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்க, குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் துலா கட்ட காவிரியில் புனித நீராடினர். மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அக்கோவிலில் இருந்து சுவாமி தீர்த்தவாரிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.