பதிவு செய்த நாள்
18
நவ
2022
02:11
பத்தினம்திட்டா :உச்ச நீதிமன்றம் 2018ல் அளித்த தீர்ப்பின்படி, சபரிமலையில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, கேரள போலீசாருக்கு, மாநில அரசு சார்பில் அளிக்கப்பட்ட கையேடு, பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த கையேட்டை திரும்பப் பெறுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை. பல்வேறு காரணங்களால், காலம் காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2018ல் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போராட்டங்கள்: இந்த உத்தரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு நடைமுறைப்படுத்த முயன்றது. இது, அய்யப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடந்த போராட்டம், வெள்ளப் பெருக்கு, கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்குப் பின் இந்தாண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பக்தர்கள் அதிக அளவில் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்களை கையாளும் முறை, போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகிய நெறிமுறைகள் அடங்கிய கையேடு, மாநில அரசு சார்பில் சமீபத்தில் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதில், கடந்த, 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அனைத்து பக்தர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்புகளும் போராட்டத்துக்கு தயாராகின. அனைத்து வயது பெண் பக்தர்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என மறைமுகமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பக்தர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளதாவது:
அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு அனுமதிப்பது என்ற முடிவை கேரள அரசு எடுத்தால், கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சபரிமலையை மீண்டும் போர்க்களமாக்கும் முயற்சியில் இடதுசாரி அரசு ஈடுபட வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த எதையும் நாங்கள் மறந்து விடவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தவறான விதிமுறைகள்: இதையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய அந்த கையேட்டை வாபஸ் பெறுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக, மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றமே இது குறித்து முடிவு எடுக்கும். ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட கையேடு, தற்போது வழங்கப்பட்டு விட்டது. அதில் சில தவறான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அவை சரி செய்யப்பட்டு புதிய கையேடு வழங்கப்படும். இதில் எங்களுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்: சபரிமலையில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்த பின், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பெருமழையும், கொரோனாவும் ஏற்படுத்திய தடைகளுக்கு பின், இந்த சீசனில் அதிக அளவில் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த பெருவழிப்பாதை, புல்மேடு பாதை போன்ற அனைத்து பாதைகளும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. பெருவழிப்பாதையில் செல்பவர்கள் எருமேலியில் மாலை 4:00 மணிக்கு முன்னரும், புல்மேடு பாதையில் வருபவர்கள் சத்திரத்தில் மதியம் 2:00 மணிக்கு முன்னரும் புறப்பட வேண்டும். இப்பாதைகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே நேரக்கட்டுப்பாடு முக்கியம். தேவைப்படும் இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.