பதிவு செய்த நாள்
19
நவ
2022
08:11
சபரிமலை: சபரிமலையை சுகாதாரமாக பராமரிக்க புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டத்துடன், இந்த சீசனில் பவித்ரம் சபரிமலை என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வணங்கும் கைகளை விட, சேவை செய்யும் கைகள் தான் அய்யப்பனுக்கு விருப்பம் என்ற வாக்கியத்துடன், கேரள மாநிலம் சபரிமலையில் புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் ஏற்கனவே துவக்கப்பட்டது.
சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்களும், போலீசாரும், துப்புரவு பணியாளர்களும் இணைந்து தினமும் ஒரு மணி நேரம் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த சீசனில் தேவசம்போடுசார்பில், பவித்ரம் சபரிமலை என்ற திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பக்தர்களை ஒருங்கிணைத்து சபரிமலையை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருமுடி கட்டில் பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக் கவர் கொண்டு வரக்கூடாது. பொரி, அவல் போன்ற பொருட்களை சாதாரண பேப்பர் கவர்களில் கொண்டு வரவேண்டும். பன்னீர் பாட்டில் இங்கு பூஜைகளுக்கு எடுக்கப்படுவதில்லை என்பதால் அதை கொண்டு வரவேண்டாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துஉள்ளது.
அய்யப்ப சேவை: பல ஆண்டுகளுக்கு முன் பம்பையிலும், மன்னர் காலத்தில் சபரிமலையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சீசனில் கேரள அரசு தீயணைப்பு வீரர்களை அதிக அளவில் பணி அமர்த்துகிறது. இந்த சீசனில் சன்னிதானம், பஸ்மகுளம், மாளிகைப்புறம், சரங்குத்தி, மரக்கூட்டம் உட்பட ஒன்பது இடங்களில் 67 வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களை இணைத்து அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.நேற்று காலை மாளிகைப்புறம் அருகே ஒரு தனியார் ஹோட்டலில் காஸ் சிலிண்டர் கசிந்து, தீ பரவிய போது நிமிட நேரத்தில் தீயை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். இவர்கள் பூஜை நேரங்களில் சன்னிதானம் மற்றும் 18 படிகளை தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்வது, சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய உதவுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.இதற்கிடையே சபரிமலையில் சில நாட்களாக மாலையில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் மழை பெய்தது.