பதிவு செய்த நாள்
23
நவ
2022
07:11
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில், காளகஸ்தி சிவன் கோவில், விஜயவாடா கனகதுர்க்கை கோவில் ஆகிய கோவில்களில் பிரம்மோற்சவம் நடக்கம்போது, சுவாமி ஊர்வலத்தில் அலங்கரிக்க தேவையான திருக்குடைகளை, சென்னை இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் காணிக்கையாக சமர்ப்பித்து வருகிறது.
மேற்கண்ட கோவில் களில் வாகன சேவையின்போது இந்து தர்மார்த்த சமிதி, நன்கொடையாக வழங்கும் இந்த திருக்குடைகள் அலங்காரமாக இடம்பெறுவது வழக்கம். மேலும், ஆண்டு முழுதும் சுவாமி ஊர்வலத்தின்போதும் இந்த திருக்குடைகள் அலங்காரமாக இடம்பெறும். தற்போது, திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கியமான வாகன சேவையான கஜவாகன சேவை, நாளை இரவு நடைபெற உள்ளது. எனவே, கஜவாகன சேவை முதல் அடுத்த ஆண்டு பிரம்மோற்சவம் வரை உற்சவர் எழுந்தருளும்போது அலங்கரிக்கும் வகையில் ஐந்து திருக்குடைகளை, இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, பத்மாவதி தாயார் கோவில் துணை நிர்வாக அதிகாரி பிரபாகர் ரெட்டி, கோயில் இன்ஸ்பெக்டர் தாமு ஆகியோரிடம் காணிக்கையாக சமர்ப்பணம் செய்தார். தொடர்ந்து, ஆர்ஆர். கோபால்ஜி மற்றும் இந்து தர்மார்த்த சமிதி குழுவினரை, தேவஸ்தான அதிகாரிகள் கோவிலுக்குள் அழைத்துச் சென்று, அனைவரும் சுவாமி தரிசனம் செய்த பின், பிரசாதம் வழங்கினர்.