பதிவு செய்த நாள்
23
நவ
2022
07:11
சேவை பணியை, அதற்கு ஆகும் விளம்பர செலவை வைத்து மதிப்பிடக் கூடாது; அது நடுக் காட்டில் ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்கும் சேவையாக கூட இருக்கலாம். அதை பெறுபவரின் தேவை, கொடுப்பவரின் மனநிலையே அந்த பணி தங்கமா, ஈயமா என்பதை தீர்மானிக்கிறது. உங்கள் பணி ஒவ்வொன்றையும் அன்பால் நிரப்புங்கள். உங்கள் எண்ணம், சொல், செயலின் காரணமாக ஒருவருக்கும் மிகச் சிறிய வலி கூட ஏற்படாமல் இருக்கட்டும். இதுவே உங்கள் ஆன்மிக சாதனை; இலக்கை எட்ட நிச்சயமாக அது உங்களுக்கு உதவும் என்றார் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா.
சத்திய சாய் பாபாவின் அவதார நுாற்றாண்டை நெருங்கும் இந்நேரத்தில், மாணவ சேவையே மாதவ சேவை, அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்ற லட்சியங்களுடன், சாய் நிறுவனங்கள் பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றன. நிறுவன செயல்பாடுகளின் மூன்று துாண்களாக, உடல்நல சேவை, கல்வி, சமூக நலன் உள்ளன. ஆனந்தத்தை பரப்புவதன் வாயிலாக ஆனந்தம் அடைய வேண்டுமெனில், தன்னலமற்ற அக்கறையுடன் எல்லா பணிகளும் செய்யப்பட வேண்டும். வறுமையை அகற்றுதல், திறன் பள்ளிகள் மற்றும் வருமானம் தரும் பிற திட்டங்களைத் துவங்குதல், அனைத்து பகுதிகளிலும் நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருதல், அன்னதானம், துாய்மையான குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகள், ஆந்திராவின் புட்டபர்த்தி உட்பட நாடு முழுதும் சாய் மையங்களில் நடத்தப்படுகின்றன. கொரோனா காலத்தில் தேசிய அளவில் சாய் நிறுவனங்கள் எழுச்சியோடு பணி ஆற்றின; தமிழகத்தில் தளராமல் சேவை பணிகள் செய்யப்பட்டன.
கொரோனா காலத்தில், சாய் அமுதம் திட்டம் துவக்கப்பட்டது. இது, தமிழகத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு அவசர உதவிகளை வழங்கியது. நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை இலவசமாக வழங்குவது உட்பட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன.உணவு தயாரித்து நோயாளிகளின் வீடுகளில் வினியோகிக்கப்பட்டது. ஊரடங்கிலும் சமையல் கூடங்களில் சத்துள்ள, தரமான உணவு சமைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இத்தொற்று காலத்தில் தமிழகம் முழுதும் 2.75 லட்சம் உணவு பொட்டலங்களும், 27 ஆயிரம் மூட்டை இலவச மளிகை பொருட்களும்; 32 மாவட்டங்களில் சாய் அமுதம் உணவும் வழங்கப்பட்டன. தடுப்பூசி முகாம்கள் நடத்தியதுடன், முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இப்பணியில், 1,000க்கும் மேற்பட்ட சாய் சேவகர்கள் ஈடுபட்டனர்.
* சென்னை, கடலுார், மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, திருப்பூரில், ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழக ஸ்ரீ சத்திய சாய் நகரும் மருத்துவமனை, மருத்துவ சேவை வழங்கும் பணிகளை மேற்கொள்கிறது. பல்வேறு துறை டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் சேவையாற்றினர்.
நகரும் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் மருந்துகள் முற்றிலும் இலவசம். நோய் தடுப்பு செயல்பாடுகளில், உடல்நலம் மற்றும் சுகாதாரம், சத்துணவு, துாய்மையான குடிநீர் ஆகியவை பற்றி மக்களுக்கு வழங்குவதும் அடங்கும். மனித உயர் பண்புகள், பிரார்த்தனை, தியானம், சமூகசேவை ஆகியவற்றை செய்ய மக்களை ஊக்குவிப்பது ஆன்மிக செயல்பாடுகளில் அடங்கும்.
நகரும் மருத்துவமனையில், பொது மருத்துவம், மகப்பேறு மற்றும் கருப்பை மருத்துவம், குழந்தை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பல் மருத்துவம், ரேடியாலஜி ஆகிய சேவைகள் கிடைக்கும். மேலும், மருத்துவ வாகனங்களில், அல்ட்ராசவுண்டு, எக்ஸ்ரே, இ.சி.ஜி, - ரத்தம், நோய் கண்டறிதல் மற்றும் உயிர் வேதியியல் ஆய்வுக் கூடம், கண் பரிசோதனைக் கருவிகள், பல் பரிசோதனைக் கருவிகள் உள்ளன. இந்த சேவை, 2014ல் துவங்கப்பட்டதில் இருந்து, 1.77 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அதில், 1.14 லட்சம் பேர் தொடர்ந்து வருகின்றனர். மொத்தம் 770 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
அன்புத் திரவம்: அன்புத் திரவம் என்பது நாடு முழுதும் ரத்த தான முகாம்கள் நடத்தும் திட்டம். அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, 2021 நவ., 21 முதல் 28 வரை நடத்தப்பட்டன. கொரோனா காலத்தில் ரத்ததானம் குறித்த பல தவறான கருத்துக்கள் பரவின. சாய் இளைஞர் அணி அவற்றை நீக்கும் வகையில், சரியான தகவல்களை பகிர்ந்தது. நன்கு கண்காணிக்கப்பட்ட, சுகாதாரமான சூழலில், மருத்துவ மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் உடன் ரத்தம் கொடையாளரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, பயிற்சி பெற்ற வல்லுனர்கள் இடைவிடாமல் பணியாற்றினர். பெருந்தொற்றால் பலர் வருமானம் இன்றி தவித்தனர். இவர்களை பொருளாதாரத்தில் மேம்படுத்த உதவும் வகையில், மாநிலத்தில் 42 திறன் பள்ளிகள் துவக்கப்பட்டன.
திறன் வளர்ச்சி மையங்கள்: * கணினி பயிற்சி மையங்களில், டேலி அக்கவுண்டிங் உட்பட பிற பொது பயன்பாட்டு மென்பொருள்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறு நகரங்கள், கிராமங்களில், 15 பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
* கணினியை இயக்கும் திறன் கற்பிக்கும் மையங்களில், புரோகிரம் இயக்க கற்று தரப்படுகிறது. பெரிய நகரங்களை ஒட்டிய கிராமங்களில், 15 மையங்கள் செயல்படுகின்றன.
* மகளிருக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை கற்று தர, 12 மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் தையல், செயற்கை அணிகலன் போன்றவை கற்று தரப்படுகிறது.
சத்திய சாயி பிரகதி பதம் என்பது தனிமனித வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சத்திய சாய் பாபா வழங்கியுள்ள செய்திகளை ஆழ்ந்து கற்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி. நிறுவனத்தின் கல்வி, சேவை, ஆன்மிக பிரிவுகள் குறித்த அவரது பார்வை மற்றும் பணிகள் குறித்த அறிவை பரவலாக்குகிறது. சத்திய சாய் ஆனந்த வாணியானது, சுவாமி குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அதில் நீதிபதிகள், இசை கலைஞர்கள், பிரபலங்களின் நேர்காணல் அடங்கும். ஆன்மிகப் பணிகளில் கருத்தரங்கங்கள், சாய் இலக்கிய வாசகர் வட்டங்கள், வேதம் ஓதுதல் பணி, திருவிழாக்கள், நகர சங்கீர்த்தனம் அடங்கும்.
பிற சேவைகள்: இந்தாண்டு ஜன., முதல் ஆக., வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் நடந்துள்ளன. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.
தொடர் சேவைகள்: சாய் பாபாவின் ஜெயந்தி நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் 2025ம் ஆண்டு வரை செய்ய வேண்டிய சேவை பணிகளுக்கான திட்டத்தை சாய் நிறுவனங்கள் வகுத்துள்ளன. அதன்படி, சத்திய சாய் கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், 6,000 கிராமங்களை தேசிய அளவில் கொண்டு வர வேண்டும். அத்திட்டத்தில் தமிழகத்தில், 200 கிராமங்கள் உள்ளன. அங்கு, ஆன்மிகம் மற்றும் மனித உயர் பண்புகளைக் கற்பிக்கும் பாலவிகாஸ் துவங்குவது முக்கிய நோக்கமாக இருந்தாலும், இடத்தின் தேவைக்கேற்ப திறன் வளர்ச்சி மற்றும் மருத்துவ வசதிகளுக்கான திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
பசிப்பிணி தீர்த்தல்: புனித பாரத பூமி அன்னபூர்ண ஷேத்திரம் ஆகும். இத்தகையப் புனித பூமியில் பசியாலும், வறுமையாலும் இறப்பதை பார்த்து நாம் எப்படி ஊமைகளாக இருக்க முடியும் என்றார் சத்திய சாய் பாபா. கொரோனா தொற்று காலத்தில், அமிர்த கலசம் திட்டத்தின்கீழ், நாடு முழுதும் மளிகை பொருட்கள் உடைய தொகுப்புகள் வழங்கப்பட்டன. தேசிய அளவிலான, நீடித்த உணவு வழங்கும் திட்டத்தை துவக்க சாய் நிறுவனங்கள் உறுதி பூண்டுள்ளன. சத்திய சாயி வித்யா ஜோதி சேவை திட்டம், 2016 ஏப்., 24ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், தமிழக பள்ளிகளை தத்தெடுக்கிறது. பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, மாணவர்களின் ஆர்வத்தையும், கற்றல் அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டது. குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தி, தன்னார்வலர்கள் மனித உயர் பண்புகளை மேம்படுத்துவதை இலக்காக வைத்து பணியாற்றுகின்றனர். ஒரு தனிநபர் உலகத்தை மாற்றி அமைக்க முடியுமா என்று கேட்கலாம்; ஆனால் நிச்சயமாக நாம் சுயநலம் அற்றவராக நம்மையே மாற்றிய அமைத்துக் கொள்ள முடியும். அளவற்ற பணிகள் காத்திருக்கின்றன. ஆனால், சாய் பாபாவை பங்குதாரராக சேர்த்துக் கொண்டால் இயலாதது கூட சாத்தியப்படும். ஆன்மிக வழியில் எடுத்துவைக்கும் முதல் அடி சேவை என்பதை சாய் நிறுவங்களின் உறுப்பினர்கள் அறிவர்.
மேலும் விவரங்களுக்கு 044 - 4011 5500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.