சென்னை: கோவில்களில் கருவறை அருகில் சென்று, வி.ஐ.பி.,க்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறை படிப்படியாக குறைக்கப்படும், என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், சீராய்வுக் கூட்டம் நடந்தது.இதில், சட்டசபை அறிவிப்புகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கோவில்களில் முக்கிய பிரமுகர்கள், கருவறை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறை படிப்படியாக குறைக்கப்படும். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின் போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும், வி.ஐ.பி., தரிசனம் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.