பதிவு செய்த நாள்
27
நவ
2022
07:11
சபரிமலை, சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ஆன்லைன் முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர். நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இன்று, 63 ஆயிரத்து, 130 பேரும், நாளை, 85 ஆயிரத்து, 812 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால் சன்னிதானத்தில் நீண்ட நேரம் கியூவில் நிற்பதையும், நெரிசலையும் தவிர்க்கலாம் என, தேவசம் போர்டும், போலீசும் தெரிவித்துள்ளது. ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களை தவிர்த்து, பிற பொது போக்குவரத்து வாகனங்களை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என, மோட்டார் வாகன அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இரண்டாம் கட்டமாக ஒன்பது டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 95 எஸ்.ஐ.,க்கள் உட்பட 1,290 போலீசார் ஈடுபடுகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில், பாதையோரம் வரும் குரங்கு, மலை அணில் போன்றவற்றுக்கு பக்தர்கள் உணவு கொடுக்கக்கூடாது என்றும், சில நேரங்களில் அவை பக்தர்களை தாக்க கூடும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.