பதிவு செய்த நாள்
29
நவ
2022
03:11
சபரிமலை : சபரிமலை பயணத்தில் முக்கிய அம்சம் பம்பை ஆற்றில் குளிப்பது. இங்கு குளிப்பதன் வாயிலாக பக்தர்களின் பாவங்கள் களைவதாக ஐதீகம். இந்நிலையில், பக்தர்கள் எண்ணெய் தேய்த்து, சோப்பு போட்டும் குளிப்பதுடன், தாங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளையும் ஆற்றில் வீசி செல்கின்றனர். இது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை பக்தர்களிடம் ஏற்படுத்த, பம்பை நதிக்கரையில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க ஆறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக மட்டுமே பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டும். மழை பெய்து திடீர் என தண்ணீர் வரத்து அதிகரித்தால், பக்தர்கள் ஆற்றில் இறங்காமல் தடுக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. க்ஷ
நிலக்கல் - பம்பை தடத்தில் அரசு பஸ் வருவாய் ரூ.4 கோடி: நிலக்கல் -- பம்பை வழித்தடத்தில், கேரள அரசு பஸ் சேவை வாயிலாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பம்பை வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. இதில், 15 இருக்கை வரை உள்ள வாகனங்கள் பம்பை வந்து பக்தர்களை இறக்கி விட்டு, மீண்டும் நிலக்கல் திரும்பி விட வேண்டும்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும்.இதற்காக, 40 ஏசி பஸ்கள் உட்பட 169 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதற்காக நிலக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கவுன்டர்களில், பம்பை செல்லவும், திரும்பி நிலக்கல் வரவும் ஒரே நேரத்தில் டிக்கெட் எடுக்கலாம். ஏசி பஸ்சில் 80 ரூபாயும், சாதாரண பஸ்சில் 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ் சேவை வாயிலாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 4.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நவ., 21ல் அதிகபட்சமாக 52 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளது.