ஆண்டாள் பாடிய பாசுரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ராமானுஜர். நாலாயிரதிவ்ய பிரபந்தத்தைப் பெற்ற தாய் ஆழ்வார்கள் என்றால், அதை வளர்த்த தாயாக ராமானுஜரைக் குறிப்பிடுவர். ஒருசமயம், அவர் ஆண்டாளின் பாசுரங்களை உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ? என்ற பாசுரத்தைச் சொல்லி உள்ளம் உருகினார். அதாவது, மதுரை அழகர்கோவில் பெருமாளுக்கு நூறு பானை நிறைய வெண்ணெயும், அக்கார அடிசில் என்னும் பொங்கலும் சமர்ப்பிப்பதாக வேண்டியிருந்தாள். ஆனால், இதை நிறைவேற்ற முடியவில்லை. பிற்காலத்தில், ராமானுஜர் அழகர்கோவில் வந்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சென்றார். சந்நிதியில் இருந்த ஆண்டாள் எழுந்து வந்து, வாரும் கோயில் அண்ணரே! வாரும் கோயில் அண்ணரே! (என்அண்ணனே வருக) என்று வரவேற்றாள். இந்நிகழ்ச்சிக்குப் பின், ராமானுஜர் ஆண்டாளின் அண்ணனாகப் போற்றப்படுகிறார்.