பதிவு செய்த நாள்
02
டிச
2022
08:12
திருவண்ணாமலை: ‘‘தீப திருவிழாவில், அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு பார்கோடிங் கூடிய பாஸ் வழங்கப்படும்,’’ என, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஐந்தாம் நாள் இரவு உற்சவத்தில், மாடவீதி புறப்பாடுக்கு முன் திருகல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதராய் முருகர் , உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் , சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோவிலில், தீப திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் முருகேஷ், எஸ்.பி., கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோருடன் கூட்டாக ஆய்வு செய்த அவர், பின் நிருபர்களிடம் கூறியதாவது: தீபதிருவிழாவிற்கு, 30 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, பாதுகாப்பு பணி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வரக்கூடிய மிக முக்கிய நான்கு சாலைகளில், செக்போஸ்ட் அமைத்து, வாகன தணிக்கை செய்யப்படுகிறது. கார் பார்க்கிங் வசதி, 52 இடங்களில் செய்யப்பட்டுள்ளது. தீப திருவிழாவிற்கு, 12 ஆயிரம் பஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஜி., கண்ணன் தலைமையில், நான்கு டி.ஐ.ஜி.,க்கள், 27 எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட, 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பக்தர்களுக்கு பார்கோடிங் கூடிய பாஸ் வழங்கப்படும். போலி பாஸ் கொண்டு வந்தால் உள்ளே நுழைய முடியாது. பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி, தரிசனம் செய்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, இப்பகுதியில் குடியிருப்புவாசிகள், வெளிநாடுகளிலிருந்து வருவோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருட்டு குற்றங்களை தடுக்க, 38 மாவட்டங்களிலிருந்து திருட்டு தடுப்பு குற்ற பிரிவு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 500 புதிய நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காவலர்களின் மொபைலில், ஆப் மூலம் குற்றவாளிகளின் முகங்களை கண்டுபிடிக்கவும், பெண்கள் பாதுகாப்பாக வந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறநிலையத்துறை மூலம் கோவிலினுள் வர பாஸ் வழங்கப்படும். பாஸ் இல்லாமல், அங்கீகாரம் இல்லாத நபர்கள் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பதிலும், துறை அதிகாரிகள் பாஸ் இல்லாமல் அழைத்து வந்தால், அனுமதிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து, கவர்னர் வருவாரா என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘அது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது,’’ என்றார்.