பதிவு செய்த நாள்
30
ஆக
2012
10:08
திருச்சி: ஸ்ரீரங்கம், ராஜகோபுரத்தில் ஆலமரச் செடிகள் அகற்றி, மீண்டும் செடிகள் முளைக்காத வகையில் மருந்து வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலம். 156 ஏக்கர் பரப்பளவில், சப்த எனப்படும், ஏழு பிரகாரங்கள் மற்றும், 21 கோபுரங்களுடன் கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் தெற்கு கோபுரம் மொட்டைக் கோபுரமாக நின்ற நிலையில், 1979 மே 20ம் தேதி, அஹோபில மடம், 44வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளால், ஸ்ரீரங்கம் சிவப்பிரகாச ஸ்தபதியினால் ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது. கடந்த, 1987 மார்ச் 25ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையோடு, 236 அடி உயரத்துடன் கம்பீரமாக நிற்கிறது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். ராஜகோபுரத்தில் ஆங்காங்கே முளைத்திருந்த ஆலமரச் செடிகளால் கோபுரத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. செடிகளை அகற்றும் வேளையில் மீண்டும் செடிகள் முளைக்காமல் தடுக்கவும், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆலோசனை நடத்தினார். அதன்படி, செடிகளை அகற்றும் அதேவேளையில், அகற்றிய இடத்தில் மருந்து வைக்க முன்வந்த, சென்னையைச் சேர்ந்த, "டப்போலா என்ற மருந்து நிறுவனம், ஒரு கிலோ மருந்தை, 325 ரூபாய்க்கு வழங்கியது. முதற்கட்டமாக, 120 கிலோ மருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த, மூன்று நாட்களாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த ஆலமரச் செடிகளை அகற்றும் பணியிலும், "டப்போலா மருந்து வைக்கும் பணியிலும், தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, "ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அனைத்துக் கோபுரங்களிலும், ஏழு பிரகாரங்களில் உள்ள மதில் சுவர்களிலும், ஆலமரச் செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, மருந்துகள் வைக்கப்படும் என, கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.