பதிவு செய்த நாள்
06
டிச
2022
06:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவையொட்டி, கோவில் வளாகம் கரும்பு, வாழை, வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிக்கிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடக்கவுள்ள மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, 25 ஏக்கர் பரப்பளவிலுள்ள கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இவை, 20 கி.மீ., தொலைவு வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் கொடிமர வளாகம் மற்றும் இரண்டாம் பிரகாரம், கிளி கோபுர நுழைவாயில் ஆகியவற்றில் வாழை மரங்கள், இளநீர் குலைகளால் அலங்கரிக்கப்படும், பல்வேறு வண்ண ரோஜாக்கள், சாமந்தி பூ தோரணம், பன்னீர் கரும்பு தோரணம் என, இரண்டாம் பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக உள்ளன. கோவில் கொடிமர நுழைவாயிலில், இரண்டு நந்தியம்பெருமானுக்கு நடுவில் சிவலிங்கம் உள்ளது போல், வண்ண மலர் தோரணங்கள் கட்டப்பட்டு, அதன்மேல் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி, காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.