பதிவு செய்த நாள்
30
ஆக
2012
12:08
ராஜபுத்திர மன்னரான பிரித்விராஜ் சவுஹான் ஆஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது முகமது கோரி என்பவன் நம் நாட்டைக் கொள்ளையடிக்க முயன்றான். அவனை பிரித்விராஜ் நுழைவாயிலிலேயே தோற்கடித்தார். கோரி, பிரித்விராஜனின் சபைக்கு அழைத்து வரப்பட்டான். இவன் நம் நாட்டிற்கு வரும் வழியெல்லாம் நாசத்தை விளைவித்திருக்கிறான். மனிதத் தன்மையற்ற இவனுக்குக் கடும் தண்டனை தாருங்கள் என்று அமைச்சர்கள் கூறினர். அரசே! என்னைக் கொன்று விடாதீர்கள். இனி இந்துஸ்தான் பக்கமே தலைவைத்தும் படுக்கமாட்டேன். எனக்கு உயிர் பிச்சைக் கொடுங்கள் எனக் கெஞ்சினான் கோரி. கோழையைப் போல் அழுகிறாயே! உன்னைத் தண்டிப்பது ராஜபுதனத்து வீரத்துக்கே இழுக்கு. உயிர்ப்பிச்சை தருகிறேன் ஓடிவிடு! என எச்சரித்து அனுப்பினான் பிரித்விராஜன். ஆனால் அடுத்த வருடமே கோரி மீண்டும் படையெடுத்து வந்தான். பிரித்விராஜன் படையுடன் அவனை நோக்கி முன்னேறினார். இந்துஸ்தானுக்கே வரமாட்டேன் என்று கூறியவன் மீண்டும் வந்துள்ளான். முதலில் அவனுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைப்போம். மீறினால் ஒரேடியாக முடித்துவிடுவோம் என்று மன்னன் பிரித்விராஜன் கூறினார்.
இதே சமயத்தில் பிரித்விராஜனின் மீது பொறாமை கொண்ட மன்னர் ஜெயச்சந்திரன், கோரிக்கு பெரும்படை தந்து உதவினால் பிரித்விராஜனை எளிதில் தோற்கடித்துவிடலாம் என எண்ணி அவனுக்கு உதவினான். பிரித்விராஜனின் எச்சரிக்கை கடிதத்தை படித்த கோரி, என்னைப் பழைய கோரி என்று நினைத்துவிட்டான் போலும், ராணுவ ரகசியங்களையும், ராஜபுத்திர யுத்தமுறைகளையும் நான் அறிந்து கொண்டதை தெரியாத முட்டாள் அவன் என்று ஏளனமாக சிரித்தான். நாம் எச்சரிக்கைக்கு பயந்து பின்வாங்குவதாக ஒரு பதில் அனுப்புவோம். அவன் மேற்கொண்டு சீறாமல் திரும்பி விடுவான் என்று சொல்லிய கோரி, தன் முகாமை சற்று பின்னோக்கி அமைத்துக் கொண்டு பிரித்விக்கு கடிதம் அனுப்பினான். உண்மையிலேயே அவன் பயந்து விட்டான் என்றெண்ணிய பிரித்விராஜன், தன் படைகளை ஓய்வெடுக்க சொல்லி விட்டு, நாளை தலைநகர் திரும்பிவிடுவோம் என்று கூறினார்.
இதுதான் சமயம் என்று காத்திருந்த கோரி, திடீரென்று படையுடன் வந்து தாக்கிப் பெரும் சேதம் ஏற்படுத்தி பிரித்விராஜனை சிறைப்பிடித்தான். ராஜபுத்திரர்கள் இரவில் யுத்தம் செய்வதில்லை என்பதை அறிந்து, யுத்த தர்மத்தை மீறி எங்களைத் தோற்கடித்த நீயா வீரன்? நீ ஒரு கடைந்தெடுத்த கோழை என்று சீறினான் பிரித்விராஜன். பிரித்விராஜ்! எனக்கு அடிமையான நீ கண்களைத் தாழ்த்தி தலைகுனியாமல் என்னை எதிர்த்துப் பேசிவிட்டாய். கண்கள் இருந்தால் தானே இனி நேரே பார்ப்பாய், என்று அவன் கண்களை குருடாக்கி விட்டான் கோரி. தினமும் அவரை சபைக்கு அழைத்து அவமானப்படுத்தினான். அப்படியிருந்தும் சற்றும் வீரம் குறையாமல் பிரித்விராஜ் கலங்காதிருந்தார். ஒருநாள் பிரித்விராஜனின் நண்பரும், பிரித்விராஜ் ராஸோ என்ற அவரது வீர சரித்திரத்தை எழுதியவருமான கவிஞர் சந்த்பர்தாயி, ஜோதிடரின் வேடத்தில் வந்து பிரித்விராஜனை சந்திந்து வருத்தமுற்றார். பிரித்விராஜை எப்படியாவது காக்க வேண்டும் என்றெண்ணி கோரிமுகமதுவிடம் சாதுர்யமாகப் பேசி அவர் நட்பை பெற்றார். பின் ஒருநாள், கோரியிடம் ஹிந்துஸ்தானத்தின் வில் வீரர்கள் தங்கள் திறமையைக் காட்டும் கண்காட்சிகள் அங்கு அற்புதமாக நடக்கும் என்று கூறினார்.
ஷா இன் ஷா, ஒரு விண்ணப்பம். பிரித்விராஜனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒலியைக் கேட்டே அம்பு செலுத்தும் வித்தையில் அவன் நிபுணன். யார் அந்தக் குருடனா? அவன் எப்படிக் குறி வைப்பான்? சரி, நீ சொல்வதால் போட்டியில் அந்த முரட்டுக் குருடனும் கலந்து கொள்ளட்டும். அவனை அவமானப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். போட்டி ஏற்பாடானது. மேடையின் ஒரு பக்கத்தில் மணி அடிக்கப்பட்டது. அந்த ஒலி வந்த வேகத்தில் திறமையாக பிரித்விராஜன் அத்திசையை நோக்கி அம்பை செலுத்தினார். அனைவரும் வியந்தனர். முடிவில் ஏற்கனவே பேசியபடி சந்த்பர்தாயி பிரித்விராஜனை ஊக்கப்படுத்துவது போல் கோரி இருக்குமிடத்தைப் பற்றிக் குறிப்பாகக் கவிதை பாடினார். 4 மூங்கில் உயரம், 24 கஜ தூரம், 8 அங்குலம் மேலே மேடையில் சுல்தான் இருக்கிறான். குறி தவறாமல் பாணம் விடுங்கள், அரசே! என பிரித்விராஜனுக்கு மட்டும் புரியும்படி கவிதை பாடினார் சந்த்பர்தாயி. மேலும் மன்னன் கோரியிடம், இந்த பார்வையற்றவனை நீங்கள் உற்சாகப்படுத்தும்படி மணியடித்து முடிந்ததும் பாராட்ட வேண்டும் அரசே என்றும் கூறினார். அதை ஏற்ற கோரியும் மணி அடித்ததும், சபாஷ் என்று உரக்க கூறினான். உடனே பிரித்விராஜன் அம்பு எய்தார். அது கோரியின் உயிரைப் பறித்தது. அடுத்த கணமே பிரித்விராஜனும், சந்த்பர்தாயியும் ஒருவரையொருவர் மாய்த்துக் கொண்டனர். ராஜபுத்திர பாரம்பரியத்தில் மீண்டும் ஒருமுறை வீரத்தினால் வரலாறு எழுதப்பட்டது.