பதிவு செய்த நாள்
27
ஆக
2012
03:08
மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக அர்ஜுனனின் மகன் அரவான் களப்பலி கொடுக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல கடோத்கஜனின் மகனும் தலைவாங்கப்பட்டான் என்கிறது மகாபாரதக் கதை. பாண்டவர்களில் இரண்டாமவனான பீமனின் மகன் கடோத்கஜனுக்கும், யாதவகுல இளவரசி அகிலாவதி என்பவளுக்கும் பிறந்தவன் பார்பாரிகன். இவன் மிகச் சிறுவயதிலேயே போர்க் கலைகளைப் பற்றி தன் தாயிடமே அறிந்துகொண்டு வீரம் செறிந்தவனாக விளங்கினான். சிவபெருமான் அவனுக்கு மூன்று சக்தி வாய்ந்த அம்புகளை வழங்கினார். ஒரு அம்பு அவன் அழிக்க நினைக்கும் எதிரிகளை குறி வைத்து நிர்ணயம் செய்யும், மற்றொரு அம்பு அவன் பாதுகாக்க நினைப்பவர்களைக் கண்டறிந்தது நிர்ணயம் செய்யும், மூன்றாம் அம்பு பாதுகாக்க வேண்டியவர்களைத் தவிர்த்து எதிரிகளைக் கண்டறிந்து அழித்துவிடும். இப்படி மூன்று அம்புகளை அவன் வைத்திருந்ததால் அவன் திரிபாணி என்றும் அழைக்கப்பட்டான் அக்னி பகவான் கொடுத்த மூவுலகங்களையும் வெல்லும் வில்லும் அவனிடமிருந்தது என்றாலும் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவில்லை. மகாபாரதப் போர் முடிவானதும், அதில் தன் ஆற்றலைக் காட்ட எண்ணினான் பார்பாரிகன். அப்போது அவன் தாய்; இரு அணிகளில் யார் வலிமை குன்றியிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நின்று நீ போரிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள்.
பாண்டவர்களிடம் ஏழு அட்சவுகினி சேனை இருக்கிறது. கவுரவர்களிடமோ பதினோரு அட்சவுகினி சேனை இருக்கிறது. அந்த வகையில் பார்பாரிகன் பாண்டவர்கள் பக்கம் நின்றுதான் போரிடுவான் என்பது பாண்டவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் கிருஷ்ணர் வேறுவிதமாக யோசித்தார். பார்பாரிகன் யுத்தத்தின் போக்கைக் கண்டு, கடைசி நேரத்தில் யார் வலிமை குன்றியிருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நின்றுதான் போரிடுவான். அவனை யாராலும் வெல்ல முடியாது. தன் எண்ணமும் ஈடேறாது என்று தீர்மானித்தார். வழக்கம்போல தன் கபட நாடகத்தை அரங்கேற்றினார். ஒரு அந்தணர் வடிவெடுத்து பார்பாரிகனைச் சந்தித்த கிருஷ்ணர். சிறுபிள்ளையாகிய நீயும் மகாபாரதப் போரில் வெறும் இந்த மூன்று அம்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? என்று கேட்டார். அவன் தன் அம்புகளின் ஆற்றலைக் கூறி, இவை தன் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் என்னிடமே திரும்பி வந்துவிடும் என்றான். அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே நீ கூறியதை நிரூபித்துக்காட்ட முடியுமா? என்றார் கிருஷ்ணர். என்ன செய்ய வேண்டும்? என்றான் பார்பாரிகன். கிருஷ்ணர் அங்கிருந்த மரத்தைக் காட்டி, உன்னால் இந்த மரத்திலுள்ள அனைத்து இலைகளிலும் துளையிட முடியுமா? என்று கேட்டார். அவன் சிரித்தவாறு ஒரு அம்பை எடுத்து நாணேற்றினான். கண்களை மூடி தியானித்தான். அந்த நேரத்தில் கிருஷ்ணர் அவனுக்குத் தெரியாமல் மரத்திலிருந்த ஒரு இலையைப் பறித்து கீழே போட்டு தன் பாதத்தால் மறைத்துக் கொண்டார்.
பார்பாரிகன் முதல் அம்பை எய்தான் அது மிக விரைவாக மரத்திலிருந்த அத்தனை இலைகளையும் கணக்கெடுத்துவிட்டுத் திரும்பிவந்து கிருஷ்ணரின் காலையும் சுற்றிவிட்டு பார்பாரிகனிடம் சேர்ந்தது. என் காலை ஏன் இந்த அம்பு சுற்றியது? என்று கேட்டார் கிருஷ்ணர். உங்கள் பாதத்துக்குக் கீழ் ஒரு இலை இருக்கிறது அதிலிருந்து உங்கள் காலை அகற்றிவிடுங்கள். இல்லையென்றால் எனது அடுத்த அம்பு உங்கள் காலையும் துளைத்துவிடும் என்று சிரித்தான். வேண்டாம் சிறுவனே! அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்காதே என்ற கிருஷ்ணர் சிறுவனின் வலிமையை நேரில் அறிந்துகொண்டார். தான் நினைத்தாலும் இவன் எய்யும் அஸ்திரத்திலிருந்து யாரையும் காப்பாற்ற முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டார். அடுத்து அவர் தன் வேலையைத் தொடங்கினார். பார்பாரிகா! எந்த அணி வலிவிழந்துள்ளதோ, அவர்கள் பக்கம் நின்று போரிடுவதாக நீ உன் தாய்க்கு வாக்கு கொடுத்திருக்கிறாயல்லவா? ஆமாம். நீ எந்த அணியின் பக்கம் நிற்கிறாயோ அது வலிமையுடையதாகிவிடும் எதிரிலுள்ள படை வலிமையற்றதாகிவிடும் அப்போது நீ யார் பக்கம் நின்று போரிடுவாய்? உன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுவாய்?
பார்பாரிகன் யோசித்தான். இரண்டு பக்கமும் மாறி மாறி நின்று போரிடுவாயானால் மொத்த படையுமே அழிந்து போகும். நீ ஒருவன் மட்டுமே களத்தில் நிற்பாய். அதுவா உன் விருப்பம்? அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்? நீ இந்த பாரதப் போரில் ஒரு சாட்சியாக இரு. மேலும் நீ எனக்கொரு தானமும் தரவேண்டும். என்ன வேண்டும் எது கேட்டாலும் தருவாயா. நிச்சயமாக! எனக்கு உன் தலை வேண்டும்! என்றார் அந்தணர் வடிவிலிருந்த கிருஷ்ணர். பார்பாரிகன் அதிர்ச்சியடைந்தான். நீர் ஒரு சாதாரண பிராமணர் அல்ல. உண்மையைக் கூறுங்கள். யார் நீங்கள்? அப்போது கிருஷ்ணர் தன் ஆதிவடிவான மகாவிஷ்ணு கோலத்தில் தெய்வீகக் காட்சியருளினார். அதைக் கண்டு பேரானந்தம் அடைந்த பார்பாரிகன் சுவாமி, காணக்கிடைக்காத பேறு பெற்றேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்! என்று அவரைத் தொழுதான். பார்பாரிகா, மாபெரும் யுத்த களத்தில் வெற்றியடைய ஒரு தன்னிகரற்ற க்ஷத்ரியன் பலியிடப்பட வேண்டும். அதற்காகவே உன் தலையைக் கேட்டேன் நீ விரும்புவதைக் கேள் என்றார் மகாவிஷ்ணு. சுவாமி! இந்த பாரதப்போர் முழுவதையும் நான் காண அருளவேண்டும் என்றான். அப்படியே ஆகட்டும் உனது இந்தத் தியாகம் என்றென்றும் போற்றப்படும் கலியுகத்தில் எனது பெயரிலே நீ வணங்கப் படுவாய். உள்ளன்போடு உன்னை வழிபடும் பக்தர்கள் எனது பூரண ஆசியைப் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்று ஆசீர்விதித்தார்.
அவர் வார்த்தைகளில் பேருவகை கொண்ட பார்பாரிகன் தன் தலையைத் தானே அறுத்து கிருஷ்ணரிடம் தந்தான். அவர் அந்தத் தலையை எடுத்துப்போய், பாரதப் போர்க்களத்திற்கு அருகிலிருந்த குன்றின் உச்சியில் முழுப்போர்க்களத்தையும் காணும் வண்ணம் வைத்தார். 18 நாட்கள் நடந்த போர் முழுவதையும் பார்பாரிகனின் தலை கண்டது. போரின் முடிவில் கவுரவர் சேனை நிர்மூலமாக, பாண்டவர் வெற்றி பெற்றனர். அதன்பின் அவர்கள் இந்த வெற்றிக்கு நான்தான் காரணம் என்று ஒருவருக்கொருவர் வாதிட்டு, இறுதியில் கிருஷ்ணரிடம் கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர், இந்தப் போர் முழுவதையும் கண்டது கடோத்கஜன் மகன் பார்பாரிகனின் தலை. அதனிடம் சென்று கேட்போம் என்று சொல்லி, குன்றின் உச்சிக்கு பாண்டவர்களை அழைத்துச் சென்றார். பார்பாரிகா! இவர்களின் சந்தேகத்தை தீர்த்து வை என்றார் கிருஷ்ணர். அப்போது பார்பாரிகனின் தலை, இந்த மாபெரும் போரில் பாண்டவர்களாகிய நீங்கள் வெற்றி பெற்றதற்கு ஒரேயொருவர்தான் காரணம். அவர்தான் ஸ்ரீகிருஷ்ணர். அவரது முன்னேற்பாடு, திட்டம், செயல்பாடு, இருப்பு, ராஜதந்திரம் போன்றவை உங்களை வெற்றி பெறச் செய்தது. பதினெட்டு நாள் நடந்த இந்த மாபெரும் போரில், யுத்த களமெங்கும் கிருஷ்ணரின் சுதர்சனச் சக்கரம் சுழன்று சென்று எதிரிகளை வெட்டி வீழ்த்தியதைக் கண்டேன். துரோபதியான மகாகாளி அவ்வளவு ரத்தத்தையும் குடம்குடமாக ஒரு துளிகூட கீழே சிந்தாமல் குடித்ததையும் கண்டேன் என்றது.
பாண்டவர்கள் கர்வம் நீங்கினர். அதன்பின் பார்பாரிகனின் தலை ஓரிடத்தில் புதைக்கப்பட்டது. கலியுகத்தில் ஒரு அந்தணர் மூலம் அது வெளிப்பட்டது. அதன் மகிமையை அறிந்த அந்நாட்டு மன்னன் அந்தத் தலையை மூலவராகக் கொண்டு ஆலயம் அமைத்தான். திருமாலின் ஒரு பெயரான ஷ்யாம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. அவ்வாலயம் அமைந்துள்ள காடு ஷ்யாம்ஜி ஆலயம் என்று பிரபலமாக விளங்குகிறது. காடு ஷ்யாம் பாபா, காடு நரேஷ்ஜி எனவும் பெயர்கள் வழங்குகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வாலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக திருவிழா நடைபெறும் டெல்லி, ஹைதராபாத்திலும் காடு ஷ்யாம் ஆலயம் உள்ளது. சென்னை அண்ணாநகரில்- வைஷ்ணவா கல்லூரிக்கு எதிரிலும் காடு ஷ்யாமுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.