மதுரை மீனாட்சி கோயில் கோபுரங்களில் மீண்டும் வளரும் செடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2022 08:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோபுரங்கள் பராமரிப்பில்லாததால் சுதைகளுக்கு இடையே செடிகள் வளர்ந்துள்ளன. கலைநயமிக்க பல சுதைகள் சேதமடைந்து வருகின்றன. புதுமண்டபத்திலும் வரிசையாக செடிகள் முளைத்து கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதையொட்டி திருப்பணிகள் செய்து கோயில்களை புதுப்பொலிவு பெற செய்வர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2009ல் கும்பாபிேஷகம் நடந்தது. இதன்பிறகு 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் நடந்த வீரவசந்தராய மண்டப தீ விபத்து காரணமாக நடத்தப்படவில்லை. இதற்கிடையே கோயில் கோபுரங்களில் சுதைகளுக்கு இடையே செடிகள் முளைத்து வருகின்றன. இதனால் கலைநயமிக்க பல சுதைகள் சேதமுற்றுள்ளன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இச்செடிகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் 2021 டிசம்பருக்கு பிறகு அகற்றப்படவில்லை. புதுமண்டபமும் பராமரிப்பின் செடிகள் முளைத்துள்ளது. இம்மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்ட நிலையில், கலைநயமிக்க இடமாக மாற்றி பக்தர்கள் பார்வையிட அனுமதிக்க போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால் புதுமண்டபம் கலை(ளை)இழந்து வருகிறது. கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, புறாக்களின் எச்சங்களால் செடிகள் வளர்கின்றன. அவை விரைவில் அகற்றப்படும். கும்பாபிேஷக திருப்பணிகள் நடக்கும்போது முழுமையாக அனைத்து பகுதிகளும் சீரமைக்கப்படும் என்றனர்.