பதிவு செய்த நாள்
27
டிச
2022
11:12
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: வரும், 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அந்தப் பட்டியலில், செப்டம்பர், 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர், 18 அன்று தான் வளர்பிறை சதுர்த்தி திதி. அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்கின்றனர், பிரபல ஜோதிடர்கள்.
திராவிட செம்மல்களுக்கும், விநாயகர் பெருமானுக் கும், ஈ.வெ.ரா., காலத்தில் இருந்தே, தீராத வாய்க்கால் தகராறு இருப்பதை அனைவரும் அறிவர். விநாயகரின் பிறப்பை இழிவுபடுத்திய பகுத்தறிவு பகலவர்கள், பிள்ளையார் சிலையை சிதறு தேங்காயை உடைப்பது போல சாலையில் உடைத்து, தங் களது வன்மத்தை தீர்த்த கதையை பலரும் அறிவர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத இந்த பகுத்தறிவு பகலவர்கள், எந்த ஆண்டும் இல்லாமல், 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு, அரசு விடுமுறை அளிப்பதில் குளறுபடிகள் செய்து, ஹிந்துக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினர் பிறை பார்த்தே, ரம்ஜான், மொகரம் பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். பிறை தெரிவதில் பிரச்னை என்றால், வேறு ஒரு தேதியில் தான் பண்டிகையை கொண்டாடுவர். கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஆங்கில தேதியை அடிப்படையாக வைத்தே, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களை கொண்டாடுகின்றனர்.