பதிவு செய்த நாள்
27
டிச
2022
11:12
திருமலை: திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் கர்ப்பகிரக கோபுரத்தின் தங்க கவசத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கோவில் அருகில் உள்ள இடத்துக்கு, தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு மூலவர் உள்ள மூன்ற டுக்கு ஆனந்த நிலையத்தின் கோபரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. கடந்த, 839ல் பல்லவ மன்னர் விஜய தண்டிவர்மனால் கோவில் மூலஸ்தான கோபுரத்துக்கு தங்கக் கவசம் பொருத்தப்பட்டது. கடைசியாக, 1958ல் இந்த தங்கக் கவசம் மாற்றப்பட்டது. இதுவரை, ஏழு முறை மாற்றப்பட்டுள்ளது.
எட்டு மாதங்களுக்குள்...: தற்போது, இந்த தங்கக் கவசத்தை மாற்றியமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள், கட்டட கலை நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, வரும், 2023ல் தங்கக் கவசத்தை மாற்றும் பணி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி ஆறு முதல், எட்டு மாதங்களில் முடிக்கப்படும் என கருதப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் வழிபடுவதற்காக, கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பாலாலயம் வரும், பிப்., 23ல் நடத்த நாள் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு, மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளின் விக்கிரஹம் போன்ற மாதிரி வைக்கப்பட உள்ளது. மேலும், தற்போதுள்ள பெருமாளின் சக்தியை, ஒரு கும்பத்துக்கு மாற்றி, அதுவும் தற்காலிக இடத்தில் வைக்கப்படும். கோவில் தற்காலிக இடத்துக்கு மாறினாலும், தற்போதுள்ள மூலஸ்தானத்தில், வழக்கம் போல பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். ஆனால், இதை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. கடைசியாக, 1950ல் தங்கக் கவசம் மாற்றும் பணி துவங்கியது; 1958ல் நிறைவடைந்தது. தற்போது, தங்கக் கவசம் மாற்றும் பணியை, எட்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவான ஆலோசனை: தேவஸ்தான ஆவணங்களின்படி, 1958ல் 120 கிலோ தங்கம் மற்றும் 12 ஆயிரம் கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய தேவை எவ்வளவு என்பது குறித்தும், அது எப்படி சேகரிக்கப்பட உள்ளது என்பது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதற்காகும் செலவு குறித்தும் எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் தேவஸ்தானம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தேவஸ்தானத்திடம் தற்போது, 10 ஆயிரத்து 300 கிலோ தங்கம் உள்ளது. மேலும், 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. அதனால், தங்கம் மற்றும் செலவு தேவஸ்தானத்துக்கு ஒரு பிரச்னையாக இருக்காது என்று கூறப்படுகிறது. கடந்த, 1950களில், பக்தர்கள் தினசரி நூற்றுக் கணக்கிலேயே வந்தனர். ஆனால் தற்போது நாளொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரையிலும், விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் வருகை தருகின்றனர். இதனால் பக்தர்கள் நெரிசலை சமாளிப்பது தொடர்பாக தேவஸ்தானம் விரிவான ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.70 லட்சம் வீடு தானம்: திருவள்ளூர் மாவட்டம், கோடிவாலசா கிராமத்தைச் சேர்ந்த நீமாவதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ், 1600 சதுரடியில் உள்ள தன் வீட்டை, திருமலை ஏழுமலையானுக்கு நேற்று தானமாக வழங்கினார். தற்போதய சந்தை மதிப்பின்படி, இந்த வீட்டின் மதிப்பு 70 லட்சம் ரூபாய். இதற்கான ஆவணங்கள் மற்றும் வீட்டின் சாவியை, தேவஸ்தான வருவாய் அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் நீமாவதி ஒப்படைத்தார்.