பதிவு செய்த நாள்
27
டிச
2022
02:12
வேடசந்தூர்: வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் சங்கரானந்தா சுவாமிகள் மடம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் ஆண்டுதோறும் கிராமத்தினர் குருபூஜை விழா நடத்துவது வழக்கம். கடந்த வாரம் 53 வது குருபூஜை விழா கொண்டாட முடிவு செய்த போது, அங்குள்ள சிலர் கோவிலுக்கு டிரஸ்ட்டி அமைத்து, கோவில் எங்களுக்கு சொந்தமானது என பூட்டு போட்டனர். ஊர் பொதுமக்கள் தரப்பினர் பூட்டை உடைத்து கோயிலில் வழிபட்டனர். இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்த வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன், மீண்டும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க, இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து நேற்று அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று மாலை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் என 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால் கோவிலுக்கு பூட்டு போட்ட எதிர் தரப்பினர், நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம். பேச்சுவார்த்தையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி, வர மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன், டி.எஸ்.பி., துர்கா தேவி, ஒரு தரப்பு பொதுமக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இரு தரப்பினரையும் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளவும், மேற்கண்டவாறு நீதிமன்ற உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் சாமி வழிபாடு செய்வது தொடர்பாக எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போது (ஜனவரி 2,3,4) ஆகிய தேதிகளில் சாமி கும்பிடுவதில் யாருக்கும் தடை இல்லை என்பதால், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பொதுமக்கள், பேச்சு வார்த்தை முடிவுக்கு உடன்பட்டு கையெழுத்திட்டு சென்றனர்.