திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டன. ஆந்திர மாநிலம் சித்துாரில் உள்ள கே.வி.ஆர்., ஜுவல்லர்ஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, அவரது மனைவி ஸ்வர்ண கவுரி நேற்று திருமலை ஏழுமலையானுக்கு, மூன்று வகையான தங்க ஆபரணங்களை வழங்கினர். இந்த நகைகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோரிடம் வழங்கப்பட்டன. 1756 கிராம் எடையுள்ள இந்த நகைகளின் மதிப்பு 1.30 கோடி ரூபாய். இதே நன்கொடையாளர் கடந்த ஆண்டு டிசம்பரில், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இடுப்பு அணி மற்றும் வரத அபய கைகளை நன்கொடையாக அளித்துள்ளார்.