கும்பகோணம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (2ம் தேதி)அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து 22 நாட்கள் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில், பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசன வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாள் முழுவதும் தரிசித்தனர்.
நாதன்கோயில்: நந்திபுர விண்ணகரம் என்றழைக்கப்படும் நாதன்கோயில் ஜெகநாதபெருமாள் கோவிலில் அதிகாலை 5: 00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேஷவாகனத்தில் சொர்க்கவாசல் எனப்படும் மூலவர் வாயிலில் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மூலவர் ஜெகநாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. அதேபோல் செண்பகவல்லித் தாயார் வைகுண்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதே போல் நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் வஞ்சுளவல்லித் தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் அதிகாலை 5:00 மணிக்கு சொக்க வாசல் திறக்கப்பட்ட போது, சொக்கவாசல் வழியாக பெருமாளும், தாயாரும் சென்றனர். அப்போது பக்தர்களும் சொக்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோவில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.