அன்னூர்: கஞ்சப்பள்ளியில் அரவான் திருவிழா நேற்று நடந்தது.
பாரதப்போரில் தனது உயிரை களப்பலி கொடுத்த மாவீரன் அரவான். மகாபாரதத்தின் ஒரு பகுதி அரவான் பண்டிகையாகும். கஞ்சப்பள்ளியில் நூறாண்டுகளுக்கு மேலாக கூத்தாண்டவர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 10ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடந்தது, நேற்று முன்தினம் மண்டபத்திலிருந்து கோவிலுக்கு பக்தர்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக செல்லும் நிகழ்வு நடந்தது. மாலையில், அரவானுக்கு சுண்டைக்காய் நீராட்டும் விழா நடைபெற்றது, நேற்று காலை அனுமான் அரவானை தேடும் நிகழ்ச்சியும், மாலையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று கஞ்சப்பள்ளியின், முக்கிய வீதிகளில் அரவான் திருவீதியுலாவும், மாலையில் கட்டுமரத்தில் அரவாணி சேர்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.