திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் கவர்னர் பிள்ளையார்பட்டி வந்தார்.
நேற்று காலை 10:10 மணி அளவில் கவர்னர் ரவி பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வருகை தந்தார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருக்கோயில் நகரத்தார் சார்பில் அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டிஎஸ்.தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் மேளவாத்தியங்கள், குடையுடன் மாலை,சால்வை அணிவித்து கவர்னரை வரவேற்றனர். தொடர்ந்து கோயில் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார்,சோமசுந்தரம் ருருக்கள்,ஸ்ரீதர் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்ற கவர்னருக்கு பிச்சைக்குருக்கள் சங்கல்பம் செய்து சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். மூலவருக்கு தீபாரதனையை தரிசித்த கவர்னர் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் திருநாள் மண்டபத்தில் கவர்னர் அமர்ந்து சிவாச்சார்யர்கள் ஆசீர்வாத பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து திருக்கோயில் நகரத்தார் சார்பில் விநாயகர் படம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயில் அலுவலகத்திற்கு சென்ற கவர்னருக்கு தேநீர் அளிக்கப்பட்டது. அங்கு கோயில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு சென்றார்.