பதிவு செய்த நாள்
27
ஜன
2023
08:01
திருப்பதி: திருமலையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது மற்றும் லட்டு தயாரிப்பை ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி முறையில் நவீனமயமாக்குவது, இந்த ஆண்டின் முக்கிய இரட்டைத் திட்டங்கள், என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.
நாட்டின், 74-வது குடியரசு தினத்தையொட்டி, நேற்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின், செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது: திருமலையில், 4,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை, 120 கோடி ரூபாய் செலவில் அமைக்க டாடா அறக்கட்டளை முன்வந்துள்ளது. இதேபோல், ரிலையன்ஸ் குழுமம், 50 கோடி ரூபாய் செலவில், தானியங்கி முறையில் லட்டுகளை தயாரித்து தர ஒப்புக்கொண்டுள்ளது. இது, லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்கும். இந்த இரண்டு திட்டங்களும் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். திருமலையில் தங்குமிடங்கள், 90 சதவீதம் புனரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் சில மாதங்களில் முடிக்கப்படும். இதற்காக, 230 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. அடுத்து, 100 கோடி ரூபாய் செலவில், பக்தர்களுக்கான இன்னொரு வளாகமும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.