பதிவு செய்த நாள்
30
ஜன
2023
06:01
பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூராதீனம் மருதாச்சல அடிகளாரின், 63வது நாண் மங்கல விழா கொண்டாடப்பட்டது.
பேரூராதீனம் மருதாச்சல அடிகளாரின், 63வது நாண் மங்கல விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், காலை, திருமஞ்சன வழிபாடு நடந்தது. அதனைத்தொடர்ந்து, பேரூராதீனம் மருதாச்சல அடிகளார், பீடத்தில் எழுந்தருளினார். நாண் மங்கல விழாவையொட்டி, விவசாயம், மரபுவழி கலை, தமிழ்நெறி வழிபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கி வரும், 63 பேருக்கு, வேளாண் செம்மல், கலைவள செல்வர், தமிழ்நெறி வேள்வி செம்மல் ஆகிய விருதுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும், பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் வழங்கினார். அதோடு, நாண் மங்கல விழாவையொட்டி, கலைப்பித்தன் எழுதிய தீரன் சின்னமலை, கோவை கிழார் எழுதிய,கோவிலும் தமிழும், ஆசிரியர் சங்கர் எழுதிய,கொங்கு நாட்டின் சிறப்பும், வேளாண்மையும் ஆகிய மூன்று நூல்களையும், பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் வெளியிட்டார். இவ்விழாவில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரி ஆதீனம் நந்தவன மடம் முத்துசிவராமசாமி அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பேரூராதீனம் மருதாச்சல அடிகளாருக்கு சிறப்பு செய்தனர். இவ்விழாவில், ஆன்மிக அன்பர்கள், பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.