பதிவு செய்த நாள்
08
பிப்
2023
01:02
கடலுார் : வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி வளாகத்தில் நேற்று நடந்த திருஅறை தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு, 152ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த 5ம் தேதி நடந்தது. அன்றைய தினம் ஆறு முறை, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று, வள்ளலார் சித்தி பெற்ற வடலுார் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடந்தது. அதையொட்டி, வடலுார் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி மலர்களால் அலங்கரித்து, அவரது உருவப் படத்துடன் வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே ஊர்வலமாக மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்பட்டது. பார்வதிபுரம், கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராம மக்கள் வழிநெடுகிலும் பூக்கள் மற்றும் பழங்களுடன் வரவேற்றனர். வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத் திருமாளிகையில், அறை முன்பு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் திரு அறை தரிசனம் தொடங்கி, மாலை 6:00 மணி வரை நடந்தது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரு அறை தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல இடங்களில் சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்திய ஞானசபை அதிகாரிகள் மற்றும் மேட்டுகுப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.