திருப்பரங்குன்றம் மலையில் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2023 09:02
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை குகையில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி கண்டுபிடித்தார். அவருடன் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் உதயகுமார் படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் படித்தனர்.
ராஜகுரு, பாலமுரளி கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை வரலாற்று சிறப்புடையது. இங்கு இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் குடைவரை கோயில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள குன்றின் மேற்கு சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுகைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலே உள்ள குகைக்கு போகும் வழியில் இடதுபுறம் இயற்கையான ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே ஐந்து கற்படுகைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்பு பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்கு பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு இரண்டு வரிகளாக இருந்துள்ளது. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. இதனை அமைத்துக் கொடுத்தவர் பெயராக யாரஅதிற என்பதை கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் அ சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுகையிலான இருக்கையை குறிக்கிறது. இக்கல்வெட்டு கி.மு. 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு கூறினர்.