திருக்கோஷ்டியூர் கோயில் தங்க விமான திருப்பணி துவக்கம் : தங்கத்தை தகடாக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2023 05:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாரயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு வேயும் திருப்பணிக்காக தங்க தகடு (ரேக்) உருவாக்கும் பணி துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூன்றடுக்குகளில் சுவாமி எழுந்தருளியுள்ளர். சயன திருக்கோலம் அமைந்த மூலவர் சன்னதிக்கு மேல் அஷ்டாங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திலிருந்து தான் ஸ்ரீராமானுஜர் பொதுமக்களுக்கு திருமந்திரம் உபதேசித்தார். இந்த விமானத்திற்கு தங்க தகடு வேயும் திருப்பணிக்கு பாலாலயம் நடந்து, பல ஆண்டுகளாக தங்கம் சேர்க்கை நடந்து வருகிறது. மொத்தம் தேவையான 77 கிலோ தங்கத்திற்கு 40 சதவீதம் கையிருப்பில் உள்ளது. மேலும் 20 கிலோ தங்கம் மயில்ராயன் கோட்டை நாட்டார் வழங்க உள்ளனர். பக்க விமானத்திற்கு நாலு வட்டகை யாதவ சங்கத்தினர் வழங்க உள்ளனர். இதனையடுத்து திருப்பணிக்கான தங்கத்தை தகடுகளாக மாற்றும் பணி நேற்று துவங்கியது. சமஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் முன்னிலையில், இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சிவாராம் குமார் கண்காணிப்பில் இப்பணி நடைபெறுகிறது. தங்க விமானத் திருப்பணிக்கான ஸ்தபதி பொன்மராவதி சீனிவாசன் தலைமையில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாதங்களில் இப்பணி நிறைவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.