சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் ஸ்ரீவி., ஆண்டாள் கல் மண்டபங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 05:02
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள கல் மண்டபங்கள் முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை கோயில் நிர்வாகம் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமாக நகராட்சி பகுதி மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத் தோப்பு அடிவாரப் பகுதிகளிலும் ஏராளமான நிலங்கள், தோப்புகள் உள்ளது. இவற்றில் பல விளைநிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும் மதுரை, மம்சாபுரம், செண்பகத்தோப்பு செல்லும் ரோடுகளில் பல்வேறு கல் மண்டபங்கள் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கல் மண்டபங்கள் தற்போது முறையான பராமரிப்பின்றியும், பாதுகாப்பு இன்றியும், தனிநபர்களின் ஆக்கிரமிப்பிலும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் காணப்படுகிறது. தற்போதைய நவீன கட்டிடக்கலை உலகில் இது போன்ற கல்மண்டபங்களை அமைக்க முடியாத நிலையில், இருப்பதை முறையாக காப்பது அவசியம். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் பழமையான கல் மண்டபங்களை பாதுகாக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.