ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தூணில் பெரிய மின்விசிறிகள் பொருத்த முடியாமல், 6 மாதமாக பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். சுவாமி சன்னதி உள்ள முதல் பிரகாரம், மைய மண்டபத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதில் நெரிசலில் சிக்கும் பக்தர்கள், காற்றோட்டமின்றி அவதிப்படுகின்றனர். இதனால் வயது மூத்த பக்தர்கள், குழந்தைகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்தது.
இதனை தவிர்க்க ஆன்மீக நன்கொடையாளர்கள் மூலம் 6 மாதம் முன்பு பெரிய அளவிலான 12 மின் விசிறிகளை கோயில் நிர்வாகம் வாங்கியது. இதனை பிரகார தூணில் துளையிட்டு பொருத்த முடிவு செய்த நிலையில் தூண்களை துளையிட, பழமை மாற்றி புதுப்பிக்க தொல்லியல் துறை தடை விதித்து உள்ளது. இதனை அறியாத கோயில் அதிகாரிகள் அவசர கதியில் மின்விசிறியை வாங்கி வைத்து கொண்டு, தற்போது பொருத்தவும் முடியாமல், திரும்பி கொடுக்கவும் முடியாமல் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். இதனால் கடந்த 6 மாதமாக பயன்பாடின்றி கிடக்கும் மின்விசிறி, பலவீனமாகி காய்லாங்கடைக்கு தூக்கி போடும் அவல நிலையில் உள்ளது. எனவே தூணில் பொருத்தும் மின்விசிறிக்கு பதிலாக, தரையில் நிறுத்தும் மின்விசிறி பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.