பதிவு செய்த நாள்
13
செப்
2012
11:09
ஊட்டி : நீலகிரியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் வேதிப்பொருள் கலந்து தயாரிக்கப்படும், ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் போது, நீரின் உப்புத்தன்மை அதிகரித்து, அதை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகளுக்கு தோல் வியாதி, அஜீரணம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளன.
ரசாயன வர்ணங்களில் கலந்திருக்கும் காரீயம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களால் நீர் நிலைகள் மாசுபடுவதுடன், நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு, அந்நீரை பயன்படுத்தும் பொதுமக்கள், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்; இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர், நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க குன்னூர் லாஸ் நீர் வீழ்ச்சி, ஊட்டியில் காமராஜ் சாகர் அணை, கூடலூரில் இரும்பு பாலம் ஆறு, பந்தலூரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர் வீழ்ச்சியில் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.